கிருஷ்ணகிரியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது வைஷ்ணவி நகர். இந்தப் பகுதியில் ஏராளமான பட்டாசு கடைகள் உள்ளது. இந்நிலையில் வடிவேல் என்பவருக்கு சொந்தமான 1500 கிலோ வரை பட்டாசுகளை சேகரித்து வைக்கும் பட்டாசு கடையில் அதிகாலை எதிர்பாராதவிதமாக பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டது.
அந்த வழியாக ரோந்து சென்று கொண்டிருந்த காவலர்கள் இதனைக் கண்டு உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு நான்கு தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். அதிகாலை என்பதால் அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லை. இதனால் உயிர்ச்சேதமானது முற்றிலும் தவிர்க்கப்பட்டது. 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வெடிவிபத்து ஏற்பட்ட கடைக்கு அருகில் அதிகமான உணவகங்கள், தேநீர் கடைகள், மருந்தகங்கள் உள்ளிட்டவை இருப்பதால் பொதுமக்கள் அதிகம் நடமாடக்கூடிய பகுதியாக இருந்து வந்தது. அதிகாலை நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.