கரோனா பெருந்தொற்று காரணமாக டாஸ்மாக் பார்கள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், காரைக்குடியில் மட்டும் போலீசாரின் மாமூலான ஒத்துழைப்புடன் டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட்டுள்ளதால், கரோனா தொற்று பரவும் அச்சம் உருவாகியுள்ளது.
கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகளும், அதனையொட்டிய பார்களும் மூடப்பட்டன. கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல் கோயம்புத்தூர், நீலகிரி திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களைத் தவிர்த்து சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளைத் திறந்து மதுவிற்பனை செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதேவேளையில், டாஸ்மாக் பார்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கும் என்று அரசு ஆணை பிறப்பித்தது.
இந்நிலையில், அரசு அனுமதித்துள்ள 27 மாவட்டங்களிலாவது டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களைத் திறக்க அனுமதி வேண்டுமென தமிழ்நாடு பார் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அரசு அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. அதற்கடுத்த நாட்களில் தடைவிதிக்கப்பட்ட 11 மாவட்டங்களிலும், நேரத்தைக் குறைத்து, விதிமுறைகளுடன் டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதித்தது அரசு. மாறாக எங்கும் டாஸ்மாக் பார்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.
இவ்வேளையில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு உட்பட்ட 12 டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்கள் திறக்கப்பட்டு, மது அருந்துவோர்கள் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர் ஒருவரிடம் கேட்டபோது, “மாவட்டத்தில் மொத்தமுள்ள 132 டாஸ்மாக் கடைகளில், கடைகளுடன் இணைந்த பார்களின் எண்ணிக்கை 88. இதில் காரைக்குடியில் மட்டும் 12 பார்கள் உள்ளன. அரசு அறிவுறுத்தலால் திறக்கப்படாமலிருந்த இந்தப் பார்கள், உள்ளூர் போலீசாரின் ஒத்துழைப்புடன் திறக்கப்பட்டு, செயல்பட்டுவருகின்றன.
வழக்கமாக பார் நடத்துபவர்கள் மாதந்தோறும் கட்டணத்தொகையை மாவட்ட கலால் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். கரோனா காலம் என்பதால், பார் நடைபெறாததால் கட்டணத்தொகை வசூலிக்கப்படவில்லை. ஆனால், சில அரசியல்வாதிகளும், உள்ளூர் போலீசாரும் அந்தத் தொகையை வாங்கிக்கொண்டு பாரை நடத்த அனுமதித்துள்ளனர். இது அரசுக்கு வருவாய் இழப்பையும், பொதுமக்களிடையே நோய்த் தொற்று பரவும் அபாயத்தையும் அதிகமாக்கியுள்ளது” என்கிறார்.
இதுகுறித்து கருத்தறிய டாஸ்மாக் மேலாளருக்கு அழைப்பு விடுத்தோம்; பதிலில்லை. இதனால் மக்கள் மத்தியில் கரோனா பெருந்தொற்று அச்சம் உண்டாகியுள்ளது.
படம்: விவேக்