விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ளது கண்ணியம் கிராமம். இந்த கிராமம் மயிலம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது. இந்த கண்ணியம் கிராமத்திற்கு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்படி சுமார் 14 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் சாலை பணியை மேற்கொள்ளாமல் சாலைப் பணியை நிறைவு செய்ததாக பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக கிராம மக்கள் மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு ஏற்கனவே புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததால் நேற்று அலுவலகத்திற்கு முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிகாரியின் அறைக்குள் சென்று வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 100 நாள் வேலை பணிக்கான வருகை பதிவேட்டில் பணித்தள பொறுப்பாளர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பயனாளியின் கையெழுத்து இல்லாமல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றும், இதில் குறிப்பாக ரேணுகாம்பாள், நாராயணசாமி, மகேஸ்வரி உட்பட இறந்துபோன சிலரின் வங்கிக் கணக்கில் 3,276 ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இப்படி ஆதாரத்துடன் புகார் தெரிவித்தும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும், உயர் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர் என்றும் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் அனுப்ப உள்ளோம். அவரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப் போவதாக கண்ணியம் கிராம மக்கள் ஆவேசத்துடன் கூறிவிட்டு கலைந்து சென்றனர். முறைகேடு நடந்துள்ளது உண்மையா? பொய்யா? என்பதை உயர் அதிகாரிகள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவது ஏன்? என்று கேள்வி எழுப்புகிறார்கள் அப்போது சமூக ஆர்வலர்கள்.