மதுராந்தகத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் பெற்ற கடனை அடைக்காததால் நிதி நிறுவன ஊழியர்கள் தகாத வார்த்தைகளில் திட்டியதால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதும், அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவரின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு அவரது உடலை உறவினர்கள் அந்த நிதி நிறுவன வாயிலுக்கே கொண்டு சென்று போராட்டம் நடத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பத்மநாபன் என்பவர் கடன்பெற்றிருந்தார். கடந்த இரண்டு மாதங்களாக பத்மநாபன் தவணை தொகை கட்டாததால் அந்த தனியார் நிதி நிறுவனத்தினைச் சேர்ந்த ஊழியர்கள் பத்மநாபனையும் அவரது குடும்பத்தாரையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து பத்மநாபன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பத்மநாபனின் உடலை அந்த நிதி நிறுவனத்தின் வாயிலில் கிடத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த போலீசார் பத்மநாபனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் சிறிதுநேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.