தஞ்சை மாவட்டம் ஊரணிபுரம் அருகே உள்ள பணிகொண்டான் விடுதி ஊராட்சியில் கல்லனை கால்வாய் ஆற்றங்கரையில் உள்ள இரு டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி பிரமாண்டமாக கடந்த 26ந் தேதி மாணவர்கள், விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கீழ ஊரணிபுரம் விவசாயி செல்லையனை இன்று விவசாய வேலை செய்து கொண்டிருந்த போது போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.
மாலை வரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று தெரியாத உறவினர்கள் காவல் நிலையம் வரை சென்று கேட்ட போதும் செல்லையன் இருக்குமிடம் பற்றி யாரும் சொல்லவில்லை. அதனால் சாலை மறியல் செய்வோம் என்று சொல்லிவிட்டு தேடிக் கொண்டிருக்கும் போது விவசாயி செல்லையன்.. விக்னேஷ் என்ற இளைஞரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.200 வழிப்பறி செய்ததாக வழக்கு பதிவு செய்து கைது செய்து உடனடியாக சிறைக்கு அனுப்பி வைத்தனர். அதனால் உறவினர்கள் இரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த ஒரத்தநாடு டிஎஸ்பி சமாதானம் செய்து உறவினர்கள் விவசாயிகளுடன் காவல் நிலையம் சென்றால் சிறைக்கு அனுப்பிய தகவலை போலீசார் கூறியுள்ளனர். வழக்கு இல்லாமல் சிறையிலிருந்து செல்லப்பனை அழைத்து வந்து ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து விவசாயிகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதுடன் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்றும் அறிவித்துள்ளனர்.
போராட்டக் களத்தில் முன்னின்ற சின்னத்துரை கூறும் போது.. மாணவர்களுக்கும் விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் டாஸ்மாக் கடை திறக்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியரிடம் பல கிராம மக்களும் மனு கொடுத்தோம். ஆனால் அந்த மனுவுக்கு மதிப்பளிக்காமல் கடந்த 7ந் தேதி டாஸ்மாக் கடைகளை திறந்ததால் 9ந் தேதி போராட்டம் நடத்தினோம். ஒரு வாரத்தில் கடைகளை அகற்றுவதாக மாவட்ட எஸ்.பி உத்தரவாதம் கொடுத்தார்.
ஆனால் சொன்னபடி கடைகள் அகற்றவில்லை. அதனால் 26ந் தேதி மாணவர்களுடன் போராட்டம் நடந்தது. அப்போது விவசாயிகள் கைது செய்யப்பட்டோம். மாணவர்களை ஆற்றில் குதிக்க வைத்தார்கள் போலீசார். அன்றே போராட்டம் நடத்தியவர்கள் மீது ரகசியமாக வழக்கு பதிவு செய்ய திட்டமிட்ட போலீசார் இன்று விவகாயி செல்லையனை கடத்திச் சென்று பொய் வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பியுள்ளனர்.
அதே போல போராட்டத்தில் நின்ற விவசாயிகளின் பைக், ஆடுகள் காணாமல் போனதுடன் பத்மினி என்ற பெண் விவசாயியின் 2 ஏக்கர் தைல மரக்காட்டில் தீ வைத்துள்ளனர். இதை எல்லாம் கண்டுகொள்ளாத போலீசார் விவசாயிகள் மீது பொய் வழக்கு போடுகிறது. இதையெல்லாம் கண்டித்து மீண்டும் பெரிய போராட்டம் நடத்துவோம் என்றார். மக்களை கெடுக்கும் டாஸ்மாக் வேண்டாம் என்றால் வழிப்பறி வழக்கா? எம்.பி சொன்னால் எல்லாம் நடக்கும் என்கிறார்கள் போராடிய மக்கள்.