கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகில் உள்ள அம்மன் கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. விவசாயக் கூலி வேலை செய்து வரும் இவருக்கு கவுரி என்ற மனைவியும், மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் ஏழுமலை நேற்று கரும்பு வெட்டும் கூலி வேலைக்கு சென்றுவிட்டார். காலை 10 மணி அளவில் அவரது மனைவி கவுரி, தனது குழந்தைகள் இருவரையும் வயல் பகுதிக்கு அழைத்துச் சென்று இரு குழந்தைகளுக்கும் பூச்சி மருந்தை கரைத்துக் குடிக்க வைத்துள்ளார். அதன் பிறகு அவர் அங்கு உள்ள ஒரு பலா மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அப்பகுதியில் வயல் வேலை சென்றவர்கள் தற்செயலாக பார்த்துவிட்டு ஏழுமலை உறவினர்களுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து சென்று குழந்தைகள் இருவரையும் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மரத்தில் தூக்கு மாட்டி இறந்த கவுரியின் உடலை போலீசாருக்கு தெரியாமல் அடக்கம் செய்ய முயன்றுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருக்கோவிலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவுரியின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கவுரியின் மரணம் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் இரு குழந்தைகளும் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.