கடந்த சில மாதங்களாக கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்துக்களில் ஏராளமான முறைகேடுகள் நடந்து வருவதாக பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தும், மக்களின் கோரிக்கையை ஏற்காமல் ஊராட்சி மன்ற தலைவர்களின் உறவினர்களை வைத்துக்கொண்டும் ஊராட்சி மன்ற தலைவர்களை ஏவி விட்டும் மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் மக்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகள் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்கிறார் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.
இதையடுத்து பெண் ஊராட்சி மன்ற தலைவர்களின் செயல்பாடுகளில் கணவர்களின் தலையீடுகள் இருக்க கூடாது என்று அரசாங்கம் உத்தரவிட்டும் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் பெரும்பாலான ஊராட்சிகளில் இதை கடைப்பிடிப்பதில்லை எனக் கூறியும், வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறி திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமூக அமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் பெண் ஊராட்சி மன்ற தலைவர்களை அடுப்பு ஊத வைத்துவிட்டு, பினாமிகைகளை வைத்து பஞ்சாயத்து நடத்துபவர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் ஆதரவாக செயல்படுவதாக கூறி கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் மக்கள் பாதை இயக்கம், சட்ட பஞ்சாயத்து இயக்கம், வெலிங்டன் நீர்த்தேக்க சிறு குறு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் அதிகாரிகள் சமரசம் செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.