
பெண் தலைமை ஆசிரியை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த பெண் தலைமை ஆசிரியை ரஞ்சிதம். அண்மையில் இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் ரஞ்சிதத்தை கொலை செய்து 10 பவுன் நகை உட்பட 2 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக போலீசார் இரண்டு தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்த நிலையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ரஞ்சிதத்தின் வீட்டின் அருகே வசித்து வந்த அவரது தம்பி மனைவி நதியா என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் முன்னுக்கு பின்னாக நதியா பதிலளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கு பிடி விசாரணை மேற்கொண்டனர். நதியாவின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் சூர்யா என்ற நபருடன் நதியாவிற்கு முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை ரஞ்சிதம் அவருடைய கணவனிடம் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த நதியா நண்பருடன் இணைந்து ரஞ்சிதத்தை கொலை செய்தது மற்றும் வீட்டிலிருந்து நகை பணத்தை கொள்ளை அடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.