Skip to main content

தமிழ்நாட்டில் உள்ள மத்திய வேளாண் ஆராய்ச்சி மையங்களை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும்: அன்புமணி

Published on 02/12/2017 | Edited on 02/12/2017
தமிழ்நாட்டில் உள்ள மத்திய வேளாண் ஆராய்ச்சி மையங்களை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும்: அன்புமணி

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் வேளாண் ஆராய்ச்சி மையங்களை பிற மாநிலங்களில் உள்ள ஆராய்ச்சி மையங்களுடன் இணைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய வேளாண் அமைச்சர் இராதாமோகன் சிங்குக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். 

கடித விவரம்:-

தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி அமைப்புகளை மூட தங்கள் தலைமையின் கீழ் இயக்கும் அமைச்சகம் முடிவு செய்திருப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து தங்களின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவே இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன்.

சென்னையில் உள்ள மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தை கேரள மாநிலம் கொச்சியிலுள்ள மத்திய கடல்மீன்கள் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல்,  கோவையில் செயல்பட்டு வரும் கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தை  உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவில் உள்ள இந்திய கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்துடனும், திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தை கர்நாடகத்திற்கு மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள வேளாண்மை சார்ந்த ஆராய்ச்சி நிலையங்களை இப்போதுள்ள 140 என்ற எண்ணிக்கையிலிருந்து பாதியாக, அதாவது 70 ஆக குறைக்கலாம் என இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் முன்னாள் செயலாளர் டி. இராமசாமி தலைமையிலான நிபுனர் குழு பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாகவும், அதனடிப்படையில் இந்த முடிவுகளை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த முடிவுகள் சிக்கனத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டிருக்கின்றனவே தவிர ஆராய்ச்சியை கருத்தில் கொண்டு எடுக்கப்படவில்லை என்பதும், இது வேளாண் ஆராய்ச்சிகளுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதும் தான் எனது கருத்து ஆகும். இந்தியாவிலுள்ள 140 வேளாண் ஆராய்ச்சி நிலையங்களுக்கும் அவை எந்த நோக்கத்திற்கானவை என்பதைக் கருத்தில் கொண்டு தான் அவற்றின் அமைவிடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி, 140 வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனங்களும் வெவ்வேறு நோக்கம் கொண்டவையாகும். அவற்றை இணைப்பதன் மூலம் ஆராய்ச்சி முயற்சிகள் தோல்வியடைந்து விடும் என்பதை தங்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

உதாரணமாக, சென்னையில் உள்ள மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனம் உவர் நீர் மீன்வளர்ப்பில்  கவனம் செலுத்தி வருகிறது. ஆனால், கொச்சியில் உள்ள கடல் மீன்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் நோக்கம் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது ஆகும். இவை இரண்டையும் இணைப்பது எலியையும், தவளையையும் நண்பர்களாக்குவதற்கு சமமானதாகும். சென்னையிலுள்ள ஆராய்ச்சி மையம் அனைத்துத் தரப்புக்கும் பயனளிக்கும் நிலையில், கொச்சி ஆராய்ச்சி நிலையம் பயிற்சி பெற்ற மீனவர்களுக்கு மட்டும் தான் உதவியாக இருக்கும். மீன் ஏற்றுமதி மூலமாக மட்டும் இந்தியாவுக்கு ஆண்டுக்கு ரூ.35,000 கோடி வருவாய் கிடைக்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஆராய்ச்சிகளை மேற்கொள்வதன் மூலம் தான் மீன்வளத்தையும், அதன் மூலமான வருவாயையும் பெருக்க முடியும். மாறாக ஆராய்ச்சி மையங்களை இணைப்பதன் மூலம் உற்பத்தி வீழ்ச்சி மட்டுமே ஏற்படும்.

அதேபோல் தமிழகத்தில் வாழை ஆராய்ச்சி, கரும்பு ஆராய்ச்சி ஆகியவற்றில் மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களின் பங்களிப்பு அசாதாரணமானது.  கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனம் உலகப்புகழ் பெற்ற கரும்பு வகைகள் உட்பட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கரும்பு வகைகளை புதிதாக கண்டுபிடித்துள்ளது. வாழை சாகுபடியில் தமிழகம் முன்னணியில் விளங்குவதற்கு திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம் தான் மிக முக்கியக் காரணமாகும். தமிழகத்திலுள்ள தேசிய வேளாண் ஆராய்ச்சி மையங்களை மற்ற மாநிலங்களில் உள்ள நிறுவனங்களுடன் இணைப்பது தமிழகத்திற்கு மட்டுமின்றி,  வேளாண்மை குறித்த ஆராய்ச்சிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவை தவிர்த்து தமிழகத்தின் உரிமைகள் என்ற கோணத்தில் பார்த்தாலும் இந்த முடிவை தமிழ்நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நாடு முழுவதும் மொத்தம் 140 வேளாண் ஆராய்ச்சி மையங்கள் உள்ள நிலையில் தமிழகத்தில் மொத்தம் 3 நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், உத்தரப்பிரதேசத்தில் 14 நிறுவனங்களும், ஆந்திரம் மற்றும் கர்நாடகத்தில் தலா 7 நிறுவனங்களும், கேரளத்தில் 5 நிறுவனங்களும் உள்ளன. கொச்சியில் செயல்பட்டு வரும் கடல் மீன்கள் ஆராய்ச்சி நிறுவனம் 1947-ஆம் ஆண்டு  தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் பகுதியில் தான் தொடங்கப்பட்டது. ஆனால்,  பின்னாளில் தமிழக அரசியல் சூழலைக் காரணம் காட்டி அந்நிறுவனம் கேரளத்திற்கு மாற்றப்பட்டது.

இப்போது தமிழகத்திலுள்ள 3 தேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களையும் வேறு மாநிலங்களுக்கு மாற்றினால் தமிழகத்தில் தேசிய வேளாண் ஆராய்ச்சி மையங்கள் எதுவுமே இல்லை என்ற நிலை உருவாகிவிடும். இது தமிழகத்திற்கும், மத்திய அரசுக்கும் இடையிலான பிணைப்பை வலுவிழக்கச் செய்யப்படும். வேளாண்துறை நிறுவனங்கள் மட்டும் தான் என்றில்லாமல் தமிழகத்திலுள்ள மற்ற மத்திய நிறுவனங்களும் ஏதோ ஒரு காரணம் கூறி தமிழ் நாட்டிலிருந்து அகற்றப்பட்டு வருகின்றன.

உதாரணமாக கோவையில் செயல்பட்டுவரும் மத்திய அச்சகம் நாசிக்கில் உள்ள அச்சகத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இது தமிழக மக்களிடையே பெரும் மனக்குறையை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய மன வருத்தங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள 3 மத்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனங்களை  பிற மாநிலங்களில் உள்ள நிறுவனங்களுடன் இணைக்கும் முடிவை மத்திய வேளாண் அமைச்சகம் கைவிட வேண்டும்;  தமிழகத்தில் தற்போதுள்ள வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு எழுதியுள்ளார். 

சார்ந்த செய்திகள்