கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ளது தொழுதூர். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில், இந்த ஊர் அமைந்துள்ளது. இங்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்குச் சொந்தமான, கிராம கிளைக் கூட்டுறவு வங்கி, சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த வங்கியில் இப்பகுதியைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அங்கத்தினராக தங்களைப் பதிவு செய்துகொண்டு வங்கியில் வரவு செலவு கணக்கு வைத்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தக் கூட்டுறவு வங்கியை முன் அறிவிப்பின்றி ராமநத்தம் பகுதிக்கு இடமாற்றம் செய்யும் பணியில், வங்கி அதிகாரிகள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், 200க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டு வங்கியை இடமாற்றம் செய்வதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்து வங்கி முன்பு நேற்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தத் தகவல் ராமநத்தம், காவல் நிலையத்திற்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முற்றுகையில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வாடிக்கையாளர்கள், மக்களின் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட வங்கி உயரதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்தனர். அதனை ஏற்று அங்கிருந்து, பொதுமக்களும் வாடிக்கையாளர்களும் கலைந்துசென்றனர். இதனால், தொழுதூர் பகுதியில் பெரும் பரபரப்பாகக் காணப்பட்டது.