நாடு முழுவதும் கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்திலும் இது தொடர்பான அறிவிப்புகளைத் தமிழக அரசு தொடர்ந்து வெளியிட்டுவருகிறது. ஜனவரி 10ஆம் தேதிவரை சில புதிய கட்டுப்பாடுகளைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் கோவையில் டெங்கு பரவல் அதிகரித்துவருகிறது. கோவையில் 37 இடங்கள் டெங்கு ஹாட்ஸ்பாட் பகுதிகளாகக் கண்டறியப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இதுவரை திருப்பூரைச் சேர்ந்த 6 வயது சிறுமி, அன்னூர் பகுதியைச் சேர்ந்த 38 வயது நபர் என 2 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் 13 சிறுவர்கள், 19 பெரியவர்கள் என மொத்தமாக 32 பேர் டெங்கு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சைபெறும் 28 பேர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கோவையில் மட்டும் 37 இடங்கள் டெங்கு ஹாட்ஸ்பாட் பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் முழுவதும் 2,000 ஊழியர்கள் டெங்கு தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.