Skip to main content

மருத்துவர்களிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி குழந்தையின் தந்தை..!  சோகத்தில் குடும்பத்தினர்..! 

Published on 06/07/2021 | Edited on 06/07/2021

 

The father of the child raised a barrage of questions to the doctors ..! Family in grief ..!

 

ஈரோடு மாவட்டம், சம்பத் நகரைச் சேர்ந்தவர் கணேஷ். இவர், தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்துவருகிறார். இவரது மனைவி ரமணி. இவர் கருத்தரித்துள்ளார். அதனால் தனியார் மருத்துவமனையில் மாதமாதம் சென்று சிகிச்சை எடுத்துவந்தார். இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரமணி, குழந்தை பேறுக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை (03.07.2021) அனுமதிக்கப்பட்டார். ரமணியை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை நன்றாக இருப்பதாகவும் சுகப்பிரசவம்தான் எனவும் கூறியதாக கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில், 5ஆம் தேதி அதிகாலை ரமணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பரிசோதனை செய்த டாக்டர்கள் சிசேரியன் மூலம்தான் குழந்தையை எடுக்க முடியும் என கூறியிருக்கிறார்கள். மேலும், குழந்தையின் நிலை மோசமாக இருப்பதாகவும் அவர்கள் கூறியதாக கூறப்படுகிறது. பிறகு சிறிது நேரத்தில் பெண் குழந்தை பிறந்து இறந்துவிட்டதாகவும், தாய் நலமாக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 

 

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கணவன் கணேஷ் மற்றும் அவரது உறவினர்கள் திடீரென குழந்தை இறக்க காரணம் என்ன? குழந்தைக்கு என்னென்ன மருத்துவம் பார்த்தீர்கள்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் எந்த ஒரு பதிலும் அங்கிருந்த டாக்டர்கள் கூறவில்லை. ஒரு துண்டுச் சீட்டில் மட்டும் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்னர். இதனால் ஆத்திரமடைந்த கணேஷ் மற்றும் உறவினர்கள் இறந்த பெண் குழந்தை உடலுடன் நியாயம் கேட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். 

 

அப்போது ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி ஒரு ஆட்டோ மூலம் மீண்டும் ஈரோடு அரசு மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தாசில்தார் பாலசுப்பிரமணியம், டவுன் டி.எஸ்.பி. ராஜு ஆகியோர் குழந்தையின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், ஆர்.டி.ஓ. விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதுகுறித்து புகார் அளியுங்கள் என்றும் தெரிவித்தனர். இந்த நிலையில் ஆர்.டி.ஓ. பிரேமலதா இதுபற்றி தகவல் அறிந்து ஈரோடு அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவர் குழந்தையின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இறுதியில் இறந்த குழந்தையின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்பத்திரி வளாகம் பரபரப்பாக காட்சியளித்தது.

 

 

சார்ந்த செய்திகள்