மதுரையில் இளைஞர் கொலைச் செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, தாய், தந்தையுடன் சேர்ந்து சகோதரரும் கழுத்தை நெரித்துக் கொலை செய்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மதுரை மாவட்டம், சொக்கலிங்க நகரைச் சேர்ந்த மாரிச்செல்வம் என்ற இளைஞர், தனது வீட்டில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, உயிரிழந்த மாரிச்செல்வத்தின் தந்தை நாகராஜன், தாய் குருவம்மாள் ஆகிய இருவரும் தாங்கள் தான் மகனை கொலை செய்ததாக காவல்துறையினரிடம் சரணடைந்தனர். சந்தேகம் அடைந்த காவல்துறையினர், இந்த தம்பதியின் மூத்த மகனான மயில்ராஜிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மூன்று பேரும் சேர்ந்து மாரிச்செல்வதைக் கொலை செய்தது அம்பலமானது.
குடித்துவிட்டு வந்த மாரிச்செல்வம், தாய், தந்தையிடம் சொத்தில் பாதியை எழுதி வைக்கக்கோரி சண்டையிட்டதாகவும், இதில் ஆத்திரமடைந்து மாரிச்செல்வத்தைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும் மயில்ராஜ் வாக்குமூலம் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.