தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலி நகர் பகுதியில் தூண்டில் வளைவு ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட நாட்களாக அந்த பகுதி மீனவர்கள் வைத்திருந்தனர். மீனவர்களின் கோரிக்கையை ஏற்று 2022-ல் 58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவு ஏற்படுத்தி தரப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. தற்பொழுது வரை அதற்கான பணிகள் தொடங்காத நிலையில், கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் என கடந்த 10 நாட்களாக தூத்துக்குடி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வேலை நிறுத்த போராட்டமாக ஆரம்பிக்கப்பட்டு நடந்து வந்த போராட்டமானது, தற்பொழுது உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றப்பட்டுள்ளது. கடலுக்கு செல்லும் மீனவர்கள் மீண்டும் கரைக்கு வரும்போது கடல் சீற்றம் காரணமாகவும், மண்ணரிப்பு காரணமாகவும் பாதுகாப்பாக வந்து சேர முடியவில்லை. இதனால் இருவர் உயிரிழந்துள்ளனர். படகுகளும் சேதம் அடைந்துள்ளது. இவற்றையெல்லாம் தவிர்க்கும் வகையில், அந்த பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கக்கோரி இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. தற்போது போராட்டமானது சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டமாக மாறியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஒன்று கூடி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் தாண்டி நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 18 ஆம் தேதி ராமநாதபுரத்தில் நடக்கும் மீன்வர்கள் மாநாட்டை புறக்கணிக்க இருப்பதாவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.