கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களில் கடந்த 100 நாட்களுக்கு மேலாக ஈடுபட்டுவருகின்றனர். இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி பல்வேறு விவசாய அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், இன்று (05.06.2021) தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், திருச்சி - கரூர் பைபாஸ் சாலையில் மண்டை ஓட்டுடன் அரை நிர்வாணமாக மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து வேளாண் சட்டங்கள் அடங்கிய கோப்புகளைக் கிழிக்க முயற்சித்தபோது காவல்துறையினர் அவற்றைப் பறிக்க முயற்சித்தனர். இதனால் விவசாயிகளுக்கும் காவல்துறைக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதற்குப் பின்னர் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அய்யாகண்ணு, “மோடி அரசு பதவியேற்றபோது விவசாயிகளுக்கு இரட்டிப்பான விலை தரும் என்று தெரிவித்தார். ஆனால் இதுவரை தரவில்லை. ஆனால் விவசாயி எதிரான சட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார். விவசாயிகள் வாங்கிய கடனுக்குப் பணத்தைக் கட்ட வேண்டும் என வங்கி அதிகாரிகள் தொடர்ந்து வற்புறுத்திவருகின்றனர். விவசாயி தற்போது விவசாயப் பொருட்களை எடுத்துக்கொண்டு சென்றால் காவல்துறை அவர்களைப் பிடித்து அபராதம் விதிக்கின்றனர். மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து விவசாயப் பொருட்களுக்கு உரிய விலையைக் கொடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.