கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சோளம், பருத்தி, வேர்க்கடலை, கேழ்வரகு ஆகிய பயிர்களைப் பயிரிட்டுவந்தனர்.
இந்நிலையில், கடந்த மாதம் பெய்த கனமழையில் சுமார் 50 ஏக்கர் பயிர்களும் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதுகுறித்து கடந்த 7ஆம் தேதி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு முன்னிலையில் வேப்பூர் தாசில்தார் செல்வமணியிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்கள். ஆனால் 2 வாரங்களாகியும் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இன்று (22.12.2021) காலை சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் வேப்பூர் பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறம் மற்றும் சர்வீஸ் சாலைகளை மறித்து சாலை மறியல் போரட்டம் செய்தனர்.
இந்தப் போராட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வேப்பூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் தாசில்தார் செல்வமணி ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு 10 நாட்களில் நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.