"கடனை வாங்கி கஷ்டப்பட்டு விதைச்சோம்...விதைச்சதுக்கு விலையில்லையென்றால் என்ன செய்வது..?" என விதைத்து அறுவடை செய்த நெல்லை அடிமாட்டு விலைக்கு விற்காமல், சிறிய லாபத்துடன் ஆன்லைனில் வணிகம் செய்து வருகின்றனர் வேப்பகுளத்து விவசாயிகள்.
சிவகங்கை மாவட்டம் கல்லல் வட்டாரத்திலுள்ள வேப்பங்குளம் எனும் சிறிய கிராமம், மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனின் ஒத்துழைப்பால் நீர் மேலாண்மையில் தன்னிறைவுப் பெற்று ஏனைய கிராமங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகின்றது. கடந்த ஆண்டில் பெய்து முடிந்த பருவமழையால் கிராமத்திலுள்ள நான்கு கண்மாய்களும் நீர் நிரம்பி தழும்பிய நிலையில் இருக்க, விவசாயமும் செழித்தோங்கி அமோக விளைச்சலை கொடுத்தது. அறுவடை முடிந்ததும் நெல் கொள்முதல் செய்ய வந்த வியாபாரிகள் 66 கிலோ எடையுள்ள நெல் மூட்டை ஒன்றிற்கு ரூ.850 மட்டும் கொடுத்து கொள்முதல் செய்த நிலையில், அதிருப்தியடைந்த விவசாயிகள், "கஷ்டப்பட்டு விளைவித்தோம்.
அடிமாட்டு விலைக்கு விற்கனுமா என்ன.?" என்ற கேள்வியுடன் வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதை அடியோடு நிறுத்தி, தாங்களாகவே கூடி சிந்தித்து பணத்தேவையுள்ள விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டை ஒன்றிற்கு ரூ.1100- ஐ கொடுத்து கொள்முதல் செய்து பொது இடத்தில் தேக்கி வைக்க தொடங்கியுள்ளனர். அத்தோடு இல்லாமல், நெல்லை அரிசியாக்கி மதிப்புக்கூட்டி தங்கள் அரிசிக்கென தனி பெயர் கொடுத்து "வேப்பங்குளத்து அரிசி" என குறிப்பிட்ட முத்திரைக் கொடுத்து முகநூல் மற்றும் வாட்ஸ் அப் செயலிகளைக் கொண்டு ஆன்லைனில் வணிகம் செய்ய ஆரம்பித்துள்ளனர். ஆன்லைன் வர்த்தகமும் வேப்பங்குளத்து விவசாயிகளுக்கு கைக் கொடுத்து வருவதை தமிழகமெங்கும் கவனிக்க தொடங்கினர் ஏனைய விவசாயிகள்.