கடலூர் மாவட்டத்தில் கடந்த 5 தினங்களாக பெய்த கன மழையால் ஏரி, குளங்கள் முழுவதுமாக நிரம்பியுள்ளன. தொடர்ச்சியாக பெய்த கனமழையால் விருத்தாச்சலம், கம்மாபுரம், ஸ்ரீமுஷ்ணம் மற்றும் நல்லூர் பகுதிகளில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த விவசாய பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
அதையடுத்து மழைநீரில் சேதமடைந்த நெற்பயிர்கள் மற்றும் உளுந்து செடிகளை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது விவசாயிகள், சேதமடைந்த உளுந்து மற்றும் நெற் பயிர்களை காண்பித்த பின்பு, வேளாண்மை துறை அதிகாரிகள் பயிர்களின் சேதம் குறித்து எடுத்துரைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி, “வடகிழக்கு பருவமழை, நிவர் மற்றும் புரவி புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், கடந்த 10 வருடங்களாக ஜனவரி முதல் வாரத்தில் சாரசரியாக 40 முதல் 47 மி.மீட்டர் வரைதான் மழை பதிவாகும். ஆனால், தற்போது ஐந்து நாட்களில் கடலூர் மாவட்டத்தில் 114 மி.மீ கனமழை பதிவாகியுள்ளது. விருத்தாசலம், கம்மாபுரம், கடலூர் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் 200 மி.மீ வரை மழை பதிவாகியுள்ளது.
கனமழையால் விவசாயிகள் பயிரிட்டிருந்த நெற்பயிர்கள் மற்றும் உளுந்து செடிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அதனால் வேளாண்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வுசெய்து கணக்கெடுப்பு பணியை நடத்திவருகின்றனர். மணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோரம் வசிக்கும் கிராம பொது மக்களுக்குத் தண்டோரா மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
ஒரு சில இடங்களில் மணிமுக்தா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வயல் நிலங்களில் வெள்ளம் சூழ்ந்த நிலையில், தற்போது படிப்படியாக குறைந்துள்ளது. தற்போது எதிர்பாராத விதமாக பெய்த கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி வேளாண்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு எடுக்க தொடங்கியுள்ளனர். கணக்கெடுப்பு விரைவாக முடிக்கப்பட்டு, கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் உரிய நிவாரணம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.