கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தொப்பையான் குளம் இந்த கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் சிவராஜ். இவர் கடந்த 30ஆம் தேதி அவருக்கு சொந்தமான முந்திரி தோப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது முந்திரி தோப்புக்கருகே உள்ள சேர்ந்த நாடு கிராமத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து இளைஞர்கள் சிலர் அவர்களது பெண் தோழிகளுடன் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சிவராஜ் முந்திரி தோப்புக்குள் நுழைந்துள்ளனர். அப்போது சிவராஜ் அவர்களை தடுத்து நிறுத்தி இங்கு முந்திரிக் காட்டுக்குள் உங்களுக்கு என்ன வேலை என்று அந்த இளைஞர்களை கேட்டு கண்டித்துள்ளார். அந்த இளைஞர்கள் சிவராஜ்க்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் சேந்தநாடு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் சென்னை நண்பர்கள் சிலரும் ஒரு ஆட்டோவில் தொப்பையன்குளம் கிராமத்தில் உள்ள சிவராஜ் வீட்டுக்குள் புகுந்து அவரை கத்தியால் வெட்டி உள்ளனர். அவர் அங்கிருந்து தப்பி ஓடும்போது துரத்திச் சென்றுள்ளனர். அப்போது சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரையும் கத்தியால் வெட்டி உள்ளனர் இவர்கள் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி உள்ளனர்.
இதையடுத்து, அந்த இளைஞர்கள் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாதூர் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஆட்டோவுக்கு பெட்ரோல் நிரப்பி கொண்டு பணம் கொடுக்காமல், பணம் கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் பட்டா கத்தியை காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து சேந்தநாடு செல்லும் போது தொட்டியாங்குளம் டாஸ்மாக் கடை முன்பு நின்று கொண்டிருந்த இரண்டு முதியவர்களையும் தாக்கி தங்கள் வீரதீரத்தை காட்டிவிட்டு சென்று உள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் திருநாவலூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த ஐவர் கும்பல் பெட்ரோல் பங்கில் தகராறு செய்த சம்பவம், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து அவர்களை அடையாளம் கண்டு கொண்டனர்.
இதையடுத்து அவர்களை கண்டுபிடிப்பதற்காக போலீசார் சென்னை சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது சென்னையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அவர்கள் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு சென்று அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ஹரிஹரசுதன், பாடி பகுதியை சேர்ந்த முரளி, கிருஷ்ணா, ஜெகதீஸ்வரன், தைரியநாதன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து நாலு செல்போன்கள் மற்றும் இரண்டு பட்டாக்கத்தி ஒரு வீச்சரிவாள் போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது தெரிய வந்துள்ளது அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லை பகுதியிலுள்ள கிராமங்களில் புகுந்த அட்டகாசம் செய்த மேற்படி ஐவரையும் சில தினங்களிலே தேடி கண்டுபிடித்து கைது செய்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பகலவன் பாராட்டியுள்ளார்.