
'கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை' என்று நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் மூன்று பக்கங்களைக் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், "நான் கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால், மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கித் தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற முடியாது. இந்த யதார்த்தத்தை அரசியல் அனுபவம் வாய்ந்த யாரும் மறுக்க மாட்டார்கள். 'என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்குத் தவறமாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன்' என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால், நாலுபேர் நாலு விதமாக என்னைப் பற்றி பேசுவார்கள் என்பதற்காக, என்னை நம்பி என்னுடன் வருபவர்களை நான் பலிகடாவாக்க விரும்பவில்லை. ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும்" எனத் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை, கட்சித் தொடங்கவில்லை என்ற தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டின் முன் திரண்ட அவரது ரசிகர்கள், 'அறிவித்தபடி ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும்' எனக் கோஷங்கள் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.