சேலத்தில், காவல்துறை அதிகாரிகள் என்று கூறி, வியாபாரியிடம் 50 லட்சம் ரூபாய் பறித்துச் சென்ற கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், வெங்கடாஜலம் அவென்யூ குடியிருப்பைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (37). இவர், புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படும் செங்காந்தள் மலர் விதைகளை வாங்கி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் செங்காந்தள் விதைகள் வாங்குவதற்காக செப். 26ம் தேதி காலை வீட்டில் இருந்து 50 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு, ஒட்டன்சத்திரம் செல்வதற்காக காரில் சேலம் வந்தார்.
இவருக்காக, சேலம் அருகே அரியானூரில் உள்ள ஒரு விடுதியில் அவருடைய நண்பர்கள் குமார், வீராசாமி ஆகியோர் காத்திருந்தனர். வெங்கடேஷிடம் இருந்த பணத்தைப் பார்த்த அவர்கள், எல்லாம் பழைய ரூபாய் தாள்களாக இருப்பதால், அவற்றை தங்களுக்குத் தெரிந்த நண்பரிடம் கொடுத்தால் கூடுதலாக 5 லட்சம் ரூபாயுடன் புதிய பணத்தாள்களாக தருவார் என்று கூறியுள்ளனர்.
இதை நம்பிய வெங்கடேஷ், அவர்களுடன் காரில் பணத்தை எடுத்துக்கொண்டு இரும்பாலை அருகே உள்ள மாரமங்கலத்துப்பட்டிக்குச் சென்றார். அங்கு மற்றொரு சொகுசு காரில் மர்ம நபர்கள் 4 பேர் வந்து சேர்ந்தனர். அவர்களில் ஒருவர் காவல்துறை சீருடையில் இருந்தார். மற்றவர்கள் மப்டி உடையில் வந்த காவலர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
அவர்கள் திடீரென்று வெங்கடேஷ் தரப்பு வந்த காரை மடக்கி, நீங்கள் கருப்பு பணம் வைத்திருப்பதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. விசாரணைக்காக தாரமங்கலம் காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறி, வெங்கடேஷை மட்டும் அவர்களுடைய காரில் ஏற்றிக்கொண்டு சென்று விட்டனர்.
சிறிது தூரம் சென்ற நிலையில், மர்ம நபர்கள் காரை நிறுத்தி, வெங்கடேஷிடம் இருந்த பணப்பையை மட்டும் பறித்துக்கொண்டு, தாரமங்கலம் காவல்நிலையத்திற்கு வந்து விசாரணை முடிந்த பிறகு பணத்தைப் பெற்றுச்செல்லும்படி கூறி, அவரை பாதி வழியிலேயே இறக்கிவிட்டுச் சென்றனர்.
இதையடுத்து வெங்கடேஷ், தாரமங்கலம் காவல்நிலையம் சென்றார். அங்கு சென்று விசாரித்தபோது, காவல்நிலையம் தரப்பில், தாங்கள் காவலர்கள் யாரையும் கருப்பு பண விசாரணை தொடர்பாக அனுப்பவில்லை என்று கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் தன்னை மர்ம நபர்கள் திட்டமிட்டு ஏமாற்றி விட்டதை உணர்ந்தார். இதையடுத்து சம்பவ இடம் இரும்பாலை காவல்நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் அவர், நடந்த சம்பவம் குறித்து இரும்பாலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர், வெங்கடேஷ், அவருடைய நண்பர்கள் இருவர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவம் நடந்த இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
அதில், இவர்கள் சொல்வதுபோல ஒரு மர்ம காரில் வந்த சிலர் வெங்கடேஷை அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது. இந்த காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடந்து வரும் அதேவேளையில், ஒட்டன்சத்திரம் செல்ல வேண்டிய வெங்கடேஷ், எதற்காக சேலத்திற்கு வந்து சேர்ந்தார்? பணத்தை காரில் கொண்டு செல்வது மர்ம நபர்களுக்கு எப்படித் தெரியவந்தது? இதில் வெங்கடேஷின் நண்பர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்பதும் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.