ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில், காவி உடையில் இருக்கும் சித்தர் திடீரென பறந்து சென்ற சம்பவம் பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதிக்கு அருகே உள்ளது பிரப்பன்வலசை கிராமம். இந்த கிராமத்தில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. அதே சமயம், புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் தேதி இரவு 10 மணியளவில் அந்த முகாமில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
அந்த முகாமிற்கு வெளியே யாரோ ஒரு நபர் விசித்திர குரலில் கத்துவது போல் இருந்துள்ளது. இதைக் கேட்ட நபர் ஒருவர் அச்சத்துடன் வீட்டின் ஜன்னல் ஓரத்தில் இருந்து பார்த்துள்ளார். அப்போது வெளியே இருந்த வாகனத்தின் மீது பறந்த நிலையில் ஒரு உருவம் இருந்துள்ளது. காவி உடையில் சித்தர் போல் தோற்றம் கொண்ட அந்த நபர் மிளிர்ந்த கண்களுடன் வானத்திலிருந்து பறந்து வந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், ஜன்னல் ஓரத்தில் எட்டிப்பார்த்த நபரையும் பயமுறுத்தியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நபர், இந்த சம்பவம் முழுவதையும் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். 27 நொடிகள் கொண்ட இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. மேலும், இந்த வீடியோ பார்ப்பவர்கள் பறக்கும் சித்தர் என கமெண்ட் செய்து வந்தனர்.
ஆனால், இந்த வீடியோவில், ஒரு பெண்ணும் இருக்கிறார். சந்தேகத்தின் அடிப்படையில் இந்த வீடியோவில் இருக்கும் உண்மைத் தன்மையை அறிய வேண்டும் என்பதற்காக நாம் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம். அப்போது, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநரான பூபதி என்பவர் நம்மிடம் பேசும்போது '' இந்த வீடியோ போலியானது. யாரோ வேண்டுமென்றே இதை சோசியல் மீடியாவில் பரப்பியுள்ளனர். இத்தகைய செயல்களால் பொதுமக்கள் அதிகளவில் அச்சப்படுகின்றனர்'' எனத் தெரிவித்துள்ளார்.