Skip to main content

போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியும், உதவியாளராக நடித்த ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரியும் கைது

Published on 09/08/2017 | Edited on 09/08/2017
போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியும், உதவியாளராக நடித்த ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரியும் கைது

சேலம் நகரிலுள்ள கிச்சிப்பாளையம் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ஸ்ரீதர் (வயது-26). இவர் சேலத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ படித்தவர். தமிழக அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் பல போட்டித்தேர்வுகளில் கலந்துகொண்ட இவர், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாக தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் கூறிவந்துள்ளார்.
 
கடந்த மாதம் 30-ந் தேதி, சேலம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜய்பாபுவை செல்போனில் தொடர்பு கொண்டவர். அப்போது ஸ்ரீதர், “நான் திரிபுரா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி. தற்போது நான் தமிழக அரசின் பொதுத்துறை (ஆய்வு) தலைவர் மற்றும் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளேன். சேலத்தில் பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எனக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அறை ஒதுக்கித்தர வேண்டும்“ என்று கேட்டுள்ளார்.

அதற்கு விஜய்பாபு, ‘அரசின் முறையான கடிதத்துடன் வந்தால் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்‘ என்று கூறியவர், உடனடியாக சென்னை தலைமை செயலகத்துக்கு தொடர்புகொண்டு, புதிய ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம் தொடர்பாக விசாரித்தார். அப்போது அப்படி யாரும் நியமிக்கப்படவில்லை எனத்தெரிந்துள்ளது. இதன்பிறகு விஜய்பாபுவுடன் பலமுறை ஸ்ரீதர் செல்போனில் பேசியுள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை தமிழகஅரசு முத்திரை பதித்த சொகுசுகாரில் ஸ்ரீதர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்துள்ளார். அவருடன் உதவியாளர் எனக்கூறி கொண்டு சேலம் வேம்படித்தாளத்தை சேர்ந்த ஞானசுந்தரம் (வயது-70) என்பவரும் வந்துள்ளார். இவர்கள் வந்த காரில் இருந்த அரசு முத்திரையை பார்த்த அதிகாரிகள் யாரும் தடை செய்யாமல் காரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அனுமதித்துள்ளனர்.

நேராக கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறைக்கு சென்ற ஸ்ரீதருக்கு நாற்காலியில் உட்கார வைத்து தேனீர் கொடுத்துள்ளனர். ஸ்ரீதர் வைத்திருந்த திரிபுரா மாநிலத்தில் இருந்து சேலம் மாவட்டதிற்கு பணி மாற்றம் செய்யப்பட்டதற்கான உத்தரவை வாங்கிப் பார்த்த விஜய்பாபு, இது போலியான உத்தரவு என்பதை கண்டுபிடித்தார்.

இதையடுத்து, சேலம் நகர காவல்துறை ஆய்வாளர் குமரேசனுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, உடனடியாக அங்கு வந்த குமரேசன், போலி ஐ.ஏ.எஸ்.அதிகாரியான ஸ்ரீதரை கைது செய்தனர். பின்னர் அவரை, கிச்சிப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் அழைத்து சென்று விசாரித்தனர்.

கிச்சிப்பாளையம் வ.வு.சி நகரில் தன்னுடைய வீட்டுக்கு அருகிலேயே ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அதில், “தமிழ்நாடு அரசின் பொதுத்துறை(ஆய்வு) தலைவர் மற்றும் இணை செயலாளர்” என்ற பெயர் பலகையோடு அலுவலகம் அமைத்துள்ளார். அங்கிருந்த பல்வேறு ஆவணங்களையும், கணினி உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்த போலீசார் அலுவலகம் முன்பு தொங்கவிடப்பட்ட பெயர் பலகையையும் எடுத்து சென்றனர்.

மேலும் தமிழ்நாடு அரசின் முத்திரையோடு பயன்படுத்தி வந்த சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பலமணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜாவைத்தியநாதன் கையொப்பம் கொண்ட பல்வேறு ஆவணங்கள் அவர்கள் வைத்திருப்பதும், அரசின் இணைச்செயலாளர் என்ற பொறுப்புடன் பலருக்கு பணி ஆணை வழங்கி இருப்பதும் தெரியவந்தது.

ஸ்ரீதருக்கு கார் டிரைவராக இருந்தவருக்கும் இவர்களே போலியாக பணி ஆணை வழங்கி, அவரை வேலையில் சேர்த்துள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீதருக்கு எல்லா வகையிலும் உதவியாளராக பணியாற்றி வந்த நெடுஞ்சாலைத்துறை ஓய்வுபெற்ற அதிகாரி ஞானசுந்தரம் நேற்று காலை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் பணியாற்றிய இவர், பணி ஓய்வுக்கு பிறகு, சேலம் அருகிலுள்ள அறியானூர் பகுதியில் செய்யல்படுவரும் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பணிக்கு சென்று வந்துள்ளார். அங்கெ வேலைக்கு வந்த ஸ்ரீதர்கும், ஞானசுந்தரத்துக்கும் ஏற்பட்ட நட்பால் இவர்கள் இருவரும் சேர்ந்து போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடக்க திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து, இவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் சேலம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைத்தனர்.

சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்