இந்தி திரைப்படத் துறையில் பிரபல பின்னணிப் பாடகராக இருப்பவர் அர்மான் மாலிக். அவரது பெயரில் போலி என்றே யூகிக்க முடியாத அளவுக்கு உண்மைபோல் முகநூல் மற்றும் டுவிட்டர் கணக்குகள் துவங்கி அந்த போலி கணக்குகளை பயன்படுத்தி பெண்களை வலையில் வீழ்த்தி பணம் பறித்த உளுந்தூர்பேட்டையை சேர்ந்த 30 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தி திரைப்படத் துறையில் பிரபல பின்னணிப் பாடகர் மற்றும் நடிகருமான அர்மான் மாலிக் பெயரில் போலியாக முகநூல் மற்றும் டுவிட்டரில் கணக்கு தொடங்கிய உளுந்தூர்பேட்டையை சேர்ந்த மகேந்திரவர்மன் என்ற 30 வயது இளைஞர் அவரின் உண்மையான இணையதளத்தில் இருந்து அவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அவற்றை தான் துவங்கிய போலி கணக்கில் பதிவிட்டு நிஜத்தையே மிஞ்சும் அளவிற்கு பேக் ஐடியை உருவாக்கி தன்னை அர்மான் மாலிக் என்று அனைவரையும் நம்பவைத்துள்ளான்.
அதனைத் தொடர்ந்து இளம் பெண்களை குறிவைத்து அவர்களுக்கு ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் அனுப்பி உள்ளார் பேக் ஐடி மகேந்திரவர்மன். பிரபல பாடகரின் நட்பு அழைப்பு என்று நம்பி பல இளம் பெண்கள் அவரது வலையில் விழவே மெதுவாக அந்த பெண்களிடம் பழகி அவர்களின் அந்தரங்க புகைப்படங்களை மகேந்திரவர்மன் வாங்கியுள்ளான். ஆனால் ஒருகட்டத்தை தாண்டிய பிறகு அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் தனக்கு அவ்வப்போது பணம் தர வேண்டும் என்று மகேந்திரவர்மன் மிரட்டவே பல பெண்கள் தங்களால் இயன்ற அளவிற்கு பணத்தை அவனிடம் கொடுத்துள்ளனர்.
இதன் மூலம் பல லட்சம் ரூபாயை மிரட்டி சம்பாரித்துள்ளான். இந்த நிலையில் மகேந்திரவர்மனின் வலையில் சிக்கிய கோவையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவன் போலி என்பதை அறிந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் துணிச்சலாக புகார் அளித்தார். இதையடுத்து ஆய்வாளர் யமுனாதேவி உதவி ஆய்வாளர் அருண் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் அந்த இளம்பெண் மூலம் மகேந்திரவர்மனிடம் நைசாக பேசி கோவைக்கு வரவழைத்துள்ளனர். பணம் தருவதாக கூறியதால் ஆவலுடன் கோவைக்கு காலையில் வந்தவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
பட்டதாரியான மகேந்திரவர்மன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்ததும், யாருக்கும் சந்தேகம் வராதபடி செல்போன் மற்றும் பேஸ்புக் மூலமாக பெண்கள் தொடர்பு கொண்டு இணையம் மூலமாகவே பணம் பெற்றுள்ளான் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவனது செல்போன் மற்றும் டேப்பை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.