தர்மபுரி அருகே, விவசாயியிடம் ரூ.1.50 லட்சம் ரொக்கம், அடையாள ஆவணங்களை வழிப்பறி செய்த போலி போலீஸ்காரரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள சிக்கலூரைச் சேர்ந்தவர் விவசாயியான கந்தசாமி. இவர் வங்கியில் தனது நகைகளை அடமானம் வைத்து 1.50 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். கோட்டப்பட்டி அருகே உள்ள சேக்கேரி - திருவண்ணாமலை சாலை பகுதியில் சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் கந்தசாமியை வழிமறித்தார். பின்னர் அந்த வாலிபர், தன்னை ஒரு சிஐடி போலீஸ்காரர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவருடைய வாகனத்தைச் சோதனையிட வேண்டும் கூறியுள்ளார்.
சோதனையின் போது ஒரு பாலிதீன் பையில் கந்தசாமி நகைகளை அடமானமாக வைத்து பெறப்பட்ட 1.50 லட்சம் ரூபாய், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், 3 கிராமில் ஒரு மோதிரம் ஆகியவற்றை வைத்திருந்தார். இதையடுத்து, அந்த வாலிபர் பணம், ஆவணங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, இவை எல்லாவற்றையும் பக்கத்தில் உள்ள காவல்நிலையத்தில் வந்து பெற்றுக்கொள்ளும்படி கூறிவிட்டு, அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் பறந்து சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கந்தசாமி, கோட்டப்பட்டி காவல்நிலையத்திற்குச் சென்றார். அங்கு தன்னிடம் ஒரு சிஐடி போலீஸ்காரர் விசாரணை செய்ததாகவும், அவர் தனது பணத்தையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு சென்றதாகவும் கூறியுள்ளார்.
காவல்துறை நடத்திய விசாரணையில், அவர் கூறிய அடையாளத்தில் யாரும் சிஐடி பிரிவில் வேலை செய்யவில்லை என்பதும், அவரை மர்ம நபர் ஒருவர் ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கந்தசாமி அளித்த புகாரின் பேரில் கோட்டப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அரூர் மாம்பட்டியைச் சேர்ந்த தாஸ் செட்டி மகன் அலெக்ஸ் பாண்டியன் (18) என்ற வாலிபர்தான் கந்தசாமியிடம் சிஐடி போலீஸ்காரர் எனக்கூறி நூதன முறையில் ஆவணங்களையும் பணத்தையும் கொள்ளையடித்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த வாலிபரிடம் இருந்து ஆவணங்கள், 97,500 ரூபாய் ரொக்கம், மோதிரம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அலெக்ஸ் பாண்டியன் பயன்படுத்தி வந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.