சேலத்தில், பிளாஸ்டிக் கடை அதிபரை மிரட்டி பணம் பறித்ததாக மக்கள் உரிமைக் கட்சித் தலைவர் பூமொழியை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் போலி பத்திரிகையாளர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.
சேலம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்தவர் அசோக்குமார் (33). அப்பகுதியில், சிவாஜி பிளாஸ்டிக்ஸ் என்ற பெயரில் பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியவற்றை மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்து வரும் கடை நடத்தி வருகிறார். சில நாள்களுக்கு முன்பு, சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பூமொழி, அவருடைய கூட்டாளிகளான தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்க சேலம் மாவட்டத் தலைவர் பாலமுருகன், தலித் வண்ணன் ஆகியோர் அசோக்குமாரின் பிளாஸ்டிக் கடைக்குச் சென்றுள்ளனர்.
அவர்கள், தாங்களை பத்திரிகை செய்தியாளர்கள் என்றும், உங்கள் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்து வருவதாகவும், அதுகுறித்து செய்தி வெளியிடாமல் இருக்க ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதனால் கலக்கம் அடைந்த அசோக்குமார், அப்போது வரை கடையில் வசூல் ஆகியிருந்த 35 ஆயிரம் ரூபாயை எடுத்து அந்த கும்பலிடம் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட அந்த கும்பல் அங்கிருந்து கிளம்பிவிட்டது.
பணம் பறித்த கும்பல் மீது சந்தேகம் அடைந்த அசோக்குமார், இதுகுறித்து சேலம் செவ்வாய்ப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் நிகழ்விடத்தில் உள்ள பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தபோது அவரை மிரட்டி பணம் பறித்த கும்பல் பற்றிய தகவல்கள் தெரிய வந்தன. மேலும், பூமொழியுடன் வந்த நபர்கள் இருவரும் போலி பத்திரிகையாளர்கள் என்பதும் தெரிய வந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த செவ்வாய்ப்பேட்டை காவல் ஆய்வாளர் கணேசன், மக்கள் உரிமை கட்சித் தலைவர் பூமொழியை கைது செய்தார். அவருடைய கூட்டாளிகளையும் தேடி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, பூமொழியின் கூட்டாளி பாலமுருகன் முன்ஜாமின் கேட்டு சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
கைதான பூமொழி, கடந்த ஓராண்டுக்கு முன்பு கிச்சிப்பாளையம் காவல்நிலைய காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.