Skip to main content

தந்தையற்ற மகனுக்கு விலையுயர்ந்த பரிசு கொடுத்த தாய்; உயிரை பறித்த ஆசை!

Published on 28/02/2022 | Edited on 28/02/2022

 

Expensive new bike that took the life of a student!

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள எழுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராமநாதன் - சித்திரா தம்பதியின் மகன் பிரசாந்த்(22). இவர், கோயமுத்தூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.டெக் படித்து வந்தார். ஏற்கனவே இவர் தந்தை இறந்து விட்டதால், தாய் சித்திராவின் பராமரிப்பில் வளர்ந்து படித்து வந்துள்ளார். 

 

சில மாதங்களாக தனது தாய் சித்ராவிடம் புதிய பைக் வாங்கித் தருமாறு பிடிவாதம் பிடித்து வந்துள்ளார் பிரசாந்த். மகனின் பிடிவாதத்தினால் தாய் சித்ரா, கடந்த 22ஆம் தேதி, மூன்று லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் கொண்ட 373 சிசி திறன் கொண்ட பைக் ஒன்றை தவணை முறையில் மகனுக்கு வாங்கிக் கொடுத்துள்ளார். 

 

இந்நிலையில், பிரசாந்த், நேற்று முன் தினம் காலை அந்த பைக்கை எடுத்துக்கொண்டு ராமநத்தம் நோக்கி சென்றுள்ளார். அப்போது, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பிரசாந்த் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, ராமநத்தம் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே சாலை வளைவு பகுதியில் அதிவேகமாக பிரசாந்த் பைக்கை திருப்பியிருக்கிறார். அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலை ஓரத்தில் இருந்த வழிகாட்டி பலகையின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. 

 

அதில் தூக்கி வீசப்பட்ட பிரசாந்த், தலையில் ஹெல்மெட் அணியாததால் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்த தகவல் ராமநத்தம் போலீசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. போலீசார் அங்கிருந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரசாந்த் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

“ஆசை ஆசையாய் மகனுக்கு வாங்கிக்கொடுத்த பைக் அவரது உயிருக்கே ஆபத்தாய் முடிந்துவிட்டதே” என்று மகனின் உடலை பார்த்து அவர் தாயார் கதறி அழுத சம்பவம் கிராம மக்களையே கண்ணீர் விட்டு அழ வைத்து விட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்