திமுக பிரமுகரைத் தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்துச் சென்றது தொடர்பான வழக்கில் ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை முடிந்த நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் விசாரணை ஆரம்பக்கட்டத்தில் உள்ளது எனவே ஜெயகுமாருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என காவல்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
ஜெயலலிதா பிறந்தநாளான நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான இபிஎஸ் ஜெயக்குமாரை புழல் சிறைக்குச் சென்று சந்தித்திருந்தார். அதேபோல் அதிமுக தொண்டர்கள் அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், ஜெயக்குமாரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரும் அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.