கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் அ.தி.மு.கவைச் சேர்ந்த ஒன்றியக்குழுத் தலைவர் செல்லத்துரை தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமாரி, முருகன், ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் பூங்கோதை ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அ.தி.மு.க, பா.ம.க, தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் ஆரம்பித்த சில மணித்துளிகளிலேயே பா.ம.க ஒன்றியக்குழு உறுப்பினர் சரவணன் பேசும்போது, எருமனூர் ஊராட்சியில் நடந்துவரும் ஊரக வேலை வேலைவாய்ப்பு திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், எம்.என்.ஆர் பதிவேட்டைக் கிழித்தெறிந்த ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆய்வுக்கு வரும்போது துணை பி.டி.ஓ. ராஜேஷ் மதுபோதையில் வருகிறார். அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் என்று கூறினார்.
அதற்கு யாரும் பதில் அளிக்காததால் கவுன்சிலர் சரவணன், 'துணை பி.டி.ஓ ராஜேஷ் எழுந்து பதில் கூறுங்கள்' என ஆவேசமாகக் கேட்டார். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத ராஜேஷ், 'நான் மது குடித்ததை நீங்கள் பார்த்தீர்களா..?' எனக் கேட்டார். "ஆமாம் நான் தெரிந்து தான் கூறினேன். படமெடுத்துக் காட்டவா...?" என சரவணன் கேட்டார். அதற்கு பதிலளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி, "இதுபோன்று துணை பி.டி.ஓ செயல்பட மாட்டார். நேற்று முன்தினம் தடுப்பூசி போடும் முகாம் நடந்ததால் அவருக்குப் பணி அங்கு ஒதுக்கப்பட்டு இருந்தது" என்றார்.
இதையடுத்து தன்னை பற்றி பேசிய கவுன்சிலரைக் கண்டித்து துணை பி.டி.ஓ ராஜேஷ் கூட்டத்தை விட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அரசு அதிகாரிகள் அனைவரும் கூட்டத்தைப் புறக்கணித்து விட்டு வெளியேறி அலுவலகத்தின் முன்பு திரண்டனர். அதனைத் தொடர்ந்து சில ஒன்றியக்குழு உறுப்பினர்களும், அதிகாரிகளும் எவ்வித பதிலும் சொல்லாமல் அலட்சியமாக வெளிநடப்பு செய்ததைக் கண்டித்துக் கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறி போராட்டத்திற்குத் தயாராகினர்.
அரை மணி நேரத்திற்கும் மேலாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளும், ஒன்றியக் குழு உறுப்பினர்களும் தனித்தனி குழுவாக இருந்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஒன்றியக்குழுத் தலைவர் ஆகியோர், அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் இடையே சமரசம் செய்ததையடுத்து அமைதி ஏற்பட்டது. பின்னர் ஒரு மணி நேரத்திற்குப் பின்பு ஒன்றியக்குழுக் கூட்டம் மீண்டும் தொடங்கி அமைதியாக நடைபெற்றது.
கூட்டத்தில் வரவு, செலவு கணக்குகள் உறுப்பினர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு அரசு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும், முழு ஒத்துழைப்பு தராத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.