சேலத்தில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் செயற்கை நிறமூட்டிகளை கலந்து குழல் அப்பளங்களை தயாரித்து வந்த நிறுவனங்களில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குழல் அப்பளம் என்றாலே, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ் வகைகளில் ஒன்றான முக்கிய உணவுப்பொருளாகும். மஞ்சள், சிவப்பு என பார்த்தவுடனே கண்களைக் கவரும் வகையில் பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்டிருக்கும் இந்த மலிவு விலை கொரிக்கும் பண்டம், பெரு நிறுவனங்களின் காற்றடைத்த பைகளில் சொற்ப எண்ணிக்கையில் விற்கப்படும் பண்டங்களைக் காட்டிலும், கூடுதல் எடையிலும் கிடைக்கின்றன. இதனால் டைம்பாஸ் உணவாகவும், கீழ் நடுத்தர வர்க்க குடும்பங்களில் மதிய உணவுக்கு சைடு டிஷ் ஆகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில், குழல் அப்பளங்களில் செயற்கை நிறமூட்டிகளை எந்தளவுக்கு சேர்க்கலாம் என்பதற்கு அரசு ஒரு வரையறையை வைத்துள்ளது. ஆனால் சிறுவர்களைக் கவர்வதற்காகவே பளிச்சிடும் வகையில் செயற்கை நிறமூட்டிகளை சில, பல குழல் அப்பள கம்பெனிகள் கூடுதலாக சேர்த்து விடுகின்றன. இதனால் சிறுவர்கள், முதியோர்களுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில்தான் சேலத்தில், குழல் அப்பளங்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அண்மையில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனை அப்பளம் தயாரிக்கும் நிறுவனங்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தில் சுமார் 38க்கும் மேற்பட்ட குழல் அப்பள தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. கடந்த ஜன. 19ம் தேதி சேலம் மாவட்ட குழல் அப்பள தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில், அரசால் அனுமதிக்கப்பட்ட செயற்கை நிறமூட்டிகள் மற்றும் அதன் அளவு விவரங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பிப். 2ம் தேதி, மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் உணவுப்பாதுகாப்பு அலுவலர் சிவலிங்கம் உள்ளிட்ட அலுவலர்கள், சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள பராசக்தி பிளவர் மற்றும் ஆயில் மில், ராஜ்குமார் குழல் அப்பளம், வைஸ்யா குகா புராடக்ட்ஸ், ஆசிர்வாதம் டிரேடிங் கம்பெனி, அன்னை டிரேடிங் கம்பெனி, பீட்டர் கம்பெனி, சீனிவாசன் புட் புராடக்ட்ஸ் ஆகிய 7 நிறுவனங்களில் திடீர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில், ஏற்கனவே விழிப்புணர்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்ட அளவை விட அதிகமான செயற்கை நிறமூட்டிகளை 3 நிறுவனங்கள் பயன்படுத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த மூன்று நிறுவனங்களில் இருந்து 2.10 டன் குழல் அப்பள உற்பத்திப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கிருந்து உணவு மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு, உணவுப் பகுப்பாய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பகுப்பாய்வுக் கூடத்தில் இருந்து அறிக்கை கிடைத்தபிறகு, அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குழல் அப்பளம் தயாரிக்கும் நிறுவனங்களில் இதுபோன்ற சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் கூறினர். மேலும், உணவுப்பாதுகாப்புத் தர நிர்ணயச் சட்டம் 2006 மற்றும் 2011 விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை தொடரும் என்றும் எச்சரித்துள்ளனர்.