Skip to main content

கரோனாவை பொருட்படுத்தாமல் அத்துமீறி படபிடிப்பு ..! பிக் பாஸ்க்கு சீல்..!

Published on 21/05/2021 | Edited on 21/05/2021
Excessive shooting regardless of the corona,Seal for Big Boss

 

சென்னை, பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பல சினிமா படப்பிடிப்பு நடந்து வருவது வழக்கம். கபாலி, காலா, விஸ்பரூபம் 2 ,போன்ற பிரபல படங்களுக்கு இங்கு தான் பிரமாண்ட செட் அமைத்து படப்பிடிப்பும் நடந்தது. அதே போல் எண்டோமால் சையின் நிறுவனம் நடத்தும் பிக் பாஸ் ரியாலட்டி ஷோ தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் படப்பிடிப்புகளும் இங்கு தான் நடந்து வந்தது. தற்போது மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக பிரம்மாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

 

இதனை மலையாள நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் இங்கு படப்பிடிப்பில் ஈடுபட்ட 6 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தபட்டனர். அதுமட்டுமின்றி கரோனா ஊரடங்கு முடியும் வரை மே 31 ம் தேதி வரை தொலைக்காட்சி மற்றும் சினிமா என எந்தவித படப்பிடிப்பும் நடக்காது என பெப்சி தொழிற்சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்து இருந்தார். இந்த நிலையில் மலையாள பிக்பாஸ் படப்பிடிப்பில் இருந்த ஆறு ஊழியர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஊரடங்கு விதிமுறைகளை மீறி தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருவதாக, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு வந்த தகவலையடுத்து வருவாய் கோட்டாட்சியர் பிரீத்தி பார்கவ் , பூந்தமல்லி உதவி கமிஷனர் சுதர்சன், மற்றும் பூந்தமல்லி தாசில்தார் சங்கர் ஆகியோர் தலைமையில் மலையாள பிக்பாஸ் படப்பிடிப்பு நடைபெறும் அரங்கிற்கு சென்று அங்கு நிகழ்ச்சி தயாரிப்பு நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர்.

 

இந்நிலையில் விதிமுறைகளை பின்பற்றாத மலையாள பிக்பாஸ் அரங்கிற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தியதையடுத்து கரோனா விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் மலையாள பிக்பாஸ் அரங்கத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைக்க முடிவு செய்து பிக்பாஸ் அரங்கத்தின் மூன்று நுழைவாயிலுக்கு சீல் வைத்தனர். இதையடுத்து படப்பிடிப்பு நடைபெறாது என்றும், பிக்பாஸ் அரங்கத்திற்குள் உள்ள 7 நடிகர்கள், நடிகைகள் கரோனா கவச உடைகளுடன் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு தனிமைப்படுத்தபட்டனர். அவர்களின் உடமைகள் எடுக்க சிறிது கால நேரம் கொடுக்கப்பட்டது. அவர்களும் அங்கிருந்து கார்களில் கிளம்பி சென்றனர். உள்ளே படப்பிடிப்பில் ஈடுபட்ட 60 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். கரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி படப்பிடிப்பு தளத்தில் ஊழியர்களுக்கு கரோனா பாதிப்பிலிருந்தும் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வந்த பிக்பாஸ் அரங்கத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்போது ஈவிபி பிலிம் சிட்டிக்கே சீல் வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

 

 


 

சார்ந்த செய்திகள்