விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் ரெட்டியார் மில் பஸ் ஸ்டாப் அருகே ராணுவ வீரர்களுக்காகன வணிக அங்காடி உள்ளது. இந்த அங்காடியில் முன்னாள் ராணுவ வீரர்கள் தங்கள் வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்வார்கள்.
சமீப காலங்களாக, இந்த அங்காடியில் சரியான முறையில், தேவையான அளவுக்கு அத்தியாவசியப் பொருட்கள் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. இதேபோன்று இங்கு பொருட்கள் வாங்க வரும், ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு, பொருட்கள் இல்லை எனக் கூறி திருப்பி அனுப்பி வருகிறார்கள். இதுகுறித்து, அவர்கள் கேட்கும் தகவல்களுக்கும் பொறுப்பான முறையில் பதில் சொல்லாமல் அலட்சியம் செய்து மெத்தனமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று ராணுவ வீரர்கள் சுமார் 30 -க்கும் மேற்பட்டவர்கள், அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்க அங்காடிக்கு வந்துள்ளனர். நேற்றும் அவர்கள் கேட்ட பொருட்கள் எதுவும் இல்லை என்று பதில் கூறியுள்ளனர். இதே போன்று பல மாதங்களாக அங்காடியில் பொருட்கள் இல்லை என்றே பதில் கூறுகிறீர்கள், இதற்குக் என்ன காரணம் என்று கேட்டுள்ளனர். அதற்கு அங்கு பணி செய்த ஊழியர்கள், சரியான பதில் சொல்லாமல் அலட்சியம் செய்துள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த முன்னாள் ராணுவ வீரர்கள் விழுப்புரம்-புதுச்சேரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதுகுறித்து, தகவல் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர்களிடம், பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைச் சமாதானப்படுத்தினர்.