ஈரோட்டில் இன்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தனது 71 -வது பிறந்த நாளை கொண்டாடினார். இதில் காங்கிரஸ், தி.மு.க. கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், இந்தியாவில் காங்கிரஸை விட்டால், இந்த நாட்டை வழி நடத்த ஆட்சி புரிய யாருக்கும் தகுதி இல்லை என சொல்லும் அளவுக்கு, கடந்த, 70 ஆண்டுகளில் காங்., கட்சி மக்களுக்கு அனைத்தையும் செய்துவிட்டது. அதே போல் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை, காங்கிரஸ் கட்சி முழுமையாக நிறைவேற்றி இருக்கிறது.
சமீபத்தில் கூட , மத்திய பிரதேசம், ராஜஸ்தான் சதீஸ்கர் உள்ளிட்ட மூன்று மாநிலங்களிலும், புதிதாக பொறுப்பேற்ற காங்கிரஸ் முதல்வர்கள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளனர். ஆனால் சென்ற பாராளுமன்ற தேர்தலின்போது, பா.ஜ.க.மோடி ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும், 15 லட்சம் ரூபாய் வரவு வைப்பதாக கூறி ஆட்சிக்கு வந்தார். ஆனால் என்ன நடந்தது ஒரு டீக்கடைக்காரர்கள் கூட, முன்னேறவில்லை. அவர்கள் செய்த தொழிலை இழக்கும் நிலைக்கு மத்திய மோடிஅரசு தள்ளிவிட்டது. சென்ற காங்கிரஸ் ஆட்சியில் , காஸ் சிலிண்டர், 450 முதல், 500 ரூபாய்க்கு விற்றது. இப்போது, 1,100 ரூபாய்க்கு விற்கப்படுவதுடன், மானியத்தொகை வங்கிக்கணக்குக்கு வருவதில்லை.
பெட்ரோல், டீசல் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையாக விலை உயர்ந்துள்ளது. மத்திய பா.ஜ.க.மோடி அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள், மீண்டும் காங்கிரஸ், கட்சி ஆட்சிக்கு வர வேண்டும், என்பதற்காகத்தான், தற்போது ஐந்து மாநில தேர்தலில், காங்கிரஸ் கட்சியை ஆதரித்துள்ளனர் , மூத்த தலைவர் குமரிஅனந்தனின் மகள் என்ற முறையில் தான் தமிழிசை சவுந்தராஜன் மீது எனக்கு மரியாதை உள்ளது. ஆனால், ஐந்து மாநில தேர்தலில், பா.ஜ.க. தோல்வியை பற்றி பேசும்போது, வெற்றிகரமான தோல்வி என குழப்பி வருகிறார்.
பா.ஜ.,வின் இந்த பொய் பிரச்சாரத்தை மக்கள் இனி எப்போதும் ஏற்க மாட்டார்கள். மோடி அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து இந்த சூழலை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வரப்போகிற பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போதே நாம் தயாராக வேண்டும். இந்த தேர்தலில் பண மழை பெய்யும் , பொய் பிரச்சாரங்கள் செய்வார்கள். எல்லாவற்றையும் முறியடித்து தி.மு.க., காங்கிரஸ், கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் " இவ்வாறு அவர் இளங் கோவன் பேசினார் .