வருகிற நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால் பொது மக்கள் தீபாவளி பண்டிகைக்கான பொருட்களை வாங்கத் தமிழகம் முழுவதும் உள்ள ஜவுளிக்கடைகள் மற்றும் வியாபார ஸ்தலங்களில் குவிந்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும் தமிழக அரசும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் பொருட்கள் தங்கு தடையின்றி பொதுமக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் வருகிற (1.11.21)ம் தேதி முதல் (3.11.21)ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை குறித்தும் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரப்பாணி, "தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் கையிருப்பில் உள்ளது. தீபாவளிக்குள் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் கிடைக்கும். கனமழை எதிர்கொள்வதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் காயத்திரி, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.