திமுக தலைவர் கலைஞர் தொடாத எல்லைகளே இல்லை. கலை, இலக்கியம், அரசியல் என இறுதிமூச்சு வரை பல தளங்களிலும் வெற்றிகரமாக பயணித்தவர். சட்டப்பேரவையிலும், பொது வெளியிலும் சொல்ல வந்த சேதியை சமயோசிதமாக நகைச்சுவையுடன் சொல்லி எல்லோரின் கவனத்தையும் ஒருங்கே ஈர்த்துவிடும் பாங்கு கலைஞருக்கு மட்டுமே உரித்தானது. அரசியல் தளத்தில் அவரை எதிர்ப்போர்கூட அவரின் நகைச்சுவையை விரும்பி ரசிப்பார்கள்.
கவிஞர் தெய்வச்சிலை, 'கலைஞரின் நகைச்சுவை நயம்' என்ற தலைப்பில் சட்டப்பேரவை, விழாக்கள், செய்தியாளர்கள் சந்திப்பு, கட்சிக் கூட்டங்களில் கலைஞர் நகைச்சுவையாக சொன்ன 200 தகவல்களை தொகுத்து நூலாக வெளியிட்டு இருக்கிறார். நமது நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் இந்த நூலை வெளியிட்டுள்ளது. அந்த தொகுப்பில் இருந்து....
* கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
கடந்த 2006ம் ஆண்டு, அக்டோபர் மாதம் சன் டிவியில் ஒளிபரப்பான நேருக்குநேர் என்ற நிகழ்ச்சியில் கலைத்துறையினர் சம்பந்தப்பட்டவர்களின் கேள்விகளுக்கு கலைஞர் பதில் அளித்தார்.
அப்போது ஒருவர், ''உங்களுடைய இத்தனை ஆண்டு வாழ்க்கையில் என்றைக்காவது ஒரு கணம், ஒரு நிமிடம் கடவுள் இருந்தாலும் இருப்பார்னு எப்பவாவது தோன்றியிருக்கிறதா?,'' எனக் கேட்டார்.
அதற்கு கலைஞர், ''என் வாழ்க்கையில் அந்த கணம் குறுக்கே வராததற்கு அந்தக் கடவுள்தன் காரணமோ என்னமோ தெரியவில்லை,'' என பட்டென பதில் அளித்தார். இந்த பதிலால் தொலைக்காட்சி படப்பிடிப்பு அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது.
* முற்றமா? முத்தமா?
முன்னாள் அமைச்சரும் கலைஞரின் நெருங்கிய நண்பருமான மன்னை நாராயணசாமி, கருணாநிதியைத் தனது இல்லத்திற்கு அழைத்து இருந்தார். அவருடன் தாழை மு.கருணாநிதி, தென்னரசு ஆகியோரும் சென்றிருந்தனர்.
முதன்முறையாக வீட்டிற்கு வந்த தன் நண்பர்களிடம் மன்னையார், தனது வீட்டைச் சுற்றிக்காட்டி பால்யகால நினைவுகளை பகிர்ந்து கொண்டார். ''இது திண்ணை, இது கூடம், இது தாழ்வாரம் எனச் சொல்லிக்கொண்டே வந்தவர், இது முத்தம் (கிராமப்புறங்களில் முற்றத்தை முத்தம் என்று பேச்சுவழக்கில் சொல்வார்கள்) எனக் காட்டினார். இந்த முத்தத்தில்தான் நான் பிறந்தேன்,'' என்றார்.
உடனே கலைஞர் கொஞ்சமும் தாமதிக்காமல், ''நீங்கள் மட்டுமா? எல்லாருமே முத்தத்தில்தான் பிறந்தார்கள்,'' என்றதும், மன்னையார் உள்பட அனைவருமே நகர முடியாமல் சிரித்தபடியே இருந்தார்களாம்.
* காதலுக்கு பச்சைக்கொடி
1969ம் ஆண்டு மார்ச் மாதம். சட்டப்பேரவை விவாதத்தின்போது திருத்தணி எம்எல்ஏ கே.விநாயகம் பேசுகையில், ''மெரினா கடற்கரையில் ஒரு பகுதியில் 'லவ்வர்ஸ் பார்க்' (காதலர் பூங்கா) இருக்கிறது. அங்கு மற்றவர்கள் நுழையாமல் காதலர்கள் சுதந்திரமாக இருக்கும் நிலையை அரசு ஏற்படுத்தித் தருமா?. தருமா? என்பதைவிட தர வேண்டும் என வேண்டுகிறேன்.
உடனடியாக பதில் அளிக்க எழுந்த கலைஞர், ''இந்த விஷயத்தில் விநாயகத்துக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் இந்த அரசு பார்த்துக் கொள்ளும்,'' என்றார் சட்டென.
இந்தப் பதிலால் பேரவையில் எழுந்த சிரிப்பலை, மெரினாவில் அமர்ந்திருந்த மற்ற காதலர்களைச் சீண்டிப் பார்த்துவிட்டுப் போனதாம்.
* முதலைக்கு முதலை
1971ம் ஆண்டு டிசம்பர் மாதம் எட்டாம் நாளில் சட்டப்பேரவை நடவடிக்கையின்போது முஸ்லிம் லீக் கட்சி எம்எல்ஏ அப்துல் லத்தீப் பேசுகையில்,
''கூவம் ஆற்றில் முதலை இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அதனால் அங்கே அசுத்தம் வெகுவாக குறைந்து விட்டது. எனவே முற்றிலும் அசுத்தத்தைப் போக்க, கூவம் ஆற்றில் அரசு முதலைகளை விடுவது பற்றி ஆலோசிக்குமா?,'' என்றார்.
அதற்கு பதில் அளிக்க எழுந்த கலைஞர், ''ஏற்கனவே அரசாங்கம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் 'முதலை' கூவம் ஆற்றில் போட்டு இருக்கிறது...'' என முடிப்பதற்குள் கருணாநிதியின் கணநேரத்து நகைச்சுவை பதிலைக் கேட்டு பேரவையே ஆரவாரச் சிரிப்பில் மூழ்கியது.
* 1973ம் ஆண்டு மார்ச் மாதம் சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நடந்து வந்தது. அந்த விவாதத்தின்போது...
எம்எல்ஏ காமாட்சி: ''மதுரை மீனாட்சிக்கு வைர அட்டிகை, வைர கிரீடம் இன்னும் இருக்கிற பல நகைகளின் மொத்த மதிப்பு எவ்வளவு என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவிப்பாரா?,'' எனக் கேட்டார்.
கலைஞர்: ''அறநிலையைத்துறை அமைச்சர், மீனாட்சிக்கு இருக்கின்ற சொத்து மதிப்பைச் சொன்னால் காமாட்சிக்கு பொறாமை ஏற்படாதா?,'' என்றார்.
அவர் இப்படிச் சொன்னதுதான் தாமதம்... அனைத்து எம்எல்ஏக்களும் தங்களது வெடிச்சிரிப்பால் பேரவையையே அதிர வைத்தனர். முதல்வர் கலைஞர் குறிப்பிட்டது எம்எல்ஏ காமாட்சியை மட்டுமல்ல, காஞ்சியில் வீற்றிருக்கும் காமாட்சியையும் சேர்த்துதான் என புரிந்து கொண்டதால் அவையே அமளிக்காடானது.
* சுயமரியாதைக்கு ஆயுள் அதிகம்
ஒரு சமயம், இசை சித்தர் என ரசிகர்களால் கொண்டாடப்படும் சிதம்பரம் ஜெயராமனுக்கு மயிலையில் திரைப்பட இசைக்கலைஞர்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. அந்த விழாவில் கலைஞர் பங்கேற்று பேசுகையில்,
''1944ம் ஆண்டில் இசை சித்தரின் சகோதரி பத்மாவதியை என் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றேன். ஒரே நாளில்தான் எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. அவருடைய திருமணம் புரோகிதர் புடைசூழ நடந்தது. எனது திருமணம் நாவலர் தலைமையில் நடந்தது.
திருமணம் முடிந்த மூன்றே மாதங்களில், இசை சித்தர் தனது மனைவியை இழந்தார். ஆனால், நான் என் மனைவியோடு மூன்று ஆண்டுகள் வாழ்க்கை நடத்தினேன். இதை ஒருமுறை அவரிடம் வேடிக்கையாக, பார்த்தீர்களா? வைதீக திருமணத்தைவிட, சீர்திருத்த திருமணத்திற்கு வயது அதிகம்,'' என்றேன்.
வாய்ப்பு கிடைக்கின்ற போதெல்லாம் திமுகவின் சித்தாந்தங்களை பரப்புரை செய்வதில் கலைஞருக்கு நிகர் வேறு யாருமில்லை என்பதற்கு இந்த நிகழ்வும் சான்றாக அமைந்தது. ஒரு துயர சம்பவத்தைக்கூட தனக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு சொல்லிய கலைஞரின் இயல்பை திரண்டிருந்த ஆன்மீக அன்பர்களும், வைதீகக் கூட்டமும் ரசித்துச் சிரித்தது.
* 'தங்க'மான சிரிப்பு
ஒருமுறை சென்னை மாநகராட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம். அப்போது கலைஞரின் நெருங்கிய நண்பர் கைபிரம்மையா என்பவர் தனக்கும் மாநகராட்சி தேர்தலில் நிற்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கலைஞரிடம் வைத்தார்.
கலைஞர்: உமக்கு செல்வாக்கு எப்படியுள்ளது? சீட்டு கொடுத்தால் வெற்றி பெறுவீரா?
பிரம்மையா: தொகுதியிலே எல்லாரையும் எனக்குத் தெரியும். எல்லோரிடமும் நான் நல்லவிதமாகச் சிரித்துப் பேசி நல்ல உறவை வைத்திருக்கிறேன். எனவே நிச்சயம் வெற்றி பெற்று விடுவேன்.
கலைஞர்: அதாவது, பல்லைக் காட்டி வெற்றி பெறுவேன் என்கிறீர். அதுவும் வெறும் பல்லை அல்ல. தங்கப்பல் வேறு கட்டியிருக்கிறீர். தங்கத்தைக் காட்டி வாக்குகளை அள்ளி விடுவேன் என்ற நம்பிக்கை உமக்கு இருந்தால் யோசிக்கலாம்.
(இந்த உரையாடல்களைக் கேட்டு உடனிருந்த அனைவரும் பல்லைக் காட்டி சிரித்தபோது, சிரிப்பை அடக்க முடியாமல் பிரம்மையா தங்கப்பல்லை மூடியபடி சிரித்துக்கொண்டே விடைபெற்றுச் சென்றுவிட்டார்).
* முரசொலி நாளிதழில் 30.5.2007ம் தேதியன்று கலைஞர் வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கை:
கேள்வி: ஹெல்மெட் அணிவதற்கான தேதி தள்ளி வைக்கப்படுமா?
கலைஞர் பதில்: தலையில் இடம் இல்லை என்றால் தள்ளி வைத்துக்கொள்ளலாம்.
* 30.6.2007ல் முரசொலியில்...
கேள்வி: நாட்டில் போலிச்சாமியார்கள் அதிகமாக நடமாட ஆரம்பித்து விட்டார்களே!
கலைஞர் பதில்: சாமியார்கள் என்றாலே போலிதான். இதில் என்ன அசல் சாமியார்? போலிச்சாமியார்?
* 'விழா' முதல்வர்
தமிழ்நாடு மின்வாரியப் பொன்விழா, நேரு உள்விளையாட்டரங்கத்தில் 2.7.2007ம் தேதி நடந்தது. மின்வாரியப் பொன்விழா பதக்கங்களை வழங்கி முதல்வர் கலைஞர் அவர்கள் பேருரை ஆற்றியபோது:
''நான் ஐந்துமுறை முதலமைச்சர் பொறுப்பை ஏற்றாலும், பொறுப்பேற்ற ஒவ்வொரு முறையும் எப்படியாவது ஒரு விழா நடந்துள்ளன. அது வெள்ளி விழாவோ, அல்லது பொன் விழாவோ வந்து விடுகின்றன. எனவே, நான் 'விழா' முதல்வராகி விட்டேன். விழா முதல்வர் என்றால் 'விழா(த)' முதல்வராகவே ஆகிவிட்டேன்.
(உழைக்கும் வர்க்கம் நிரம்பிய அந்த அரங்கம், ஆரவாரத்தால் அதிர்ந்து போனது).
* பாண்டவர் லிப்ட்!
கலைஞர் முதல்வராக இருந்தபோது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகச் சென்றார். அந்த நிகழ்ச்சி பலமாடிக் கட்டடம் ஒன்றில் நடப்பதாக இருந்தது. லிப்டில்தான் செல்ல வேண்டும். கலைஞரோடு முக்கிய பிரமுகர்களும் லிப்டில் நுழைந்தனர்.
இப்போது அந்த லிப்ட் பயணிக்கத் தொடங்கியவுடன் கலைஞர், ''ஓ... இது பாண்டவர் லிப்டா..?'' எனக் கேட்டார். உடன் நின்றவர்கள் ஒன்றுமே புரியாமல் தவித்து நின்றனர். சிறிது மவுனத்திற்குப் பிறகு, லிப்டின் உள்பகுதியின் மேலே எழுதப்பட்ட அறிவிப்பைக் கலைஞர் சுட்டிக்காட்டினார். அங்கு ''ஐவர் மட்டுமே'' என்ற வாசகம் காணப்பட்டது. பாண்டவர் ரதம் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது பாண்டவர் லிப்டையும் பார்த்துவிட்டோம் என்ற நினைப்பில், உடன் வந்தவர்கள் புன்சிரிப்பை உதிர்க்க கலைஞரும் அவர்களோடு சேர்ந்து கொண்டார்.
* குரு முன்னரே இடம்பெயர்ந்து போய் விட்டாரே...!
தலைமைச் செயலகத்தில் 4.12.2008ம் தேதி, தமிழகத்தின் திருக்கோயில்களில் பலவற்றில் இருந்து வந்திருந்த அர்ச்சகர்கள் பலர் முதல்வர் கலைஞரைப் பார்த்துத் தங்கள் கோரிக்கைகளை தெளிவுபடுத்தி நல்வாழ்த்துகளை அளித்த பின்னர், ''இன்னும் இரண்டு நாளில் குருப்பெயர்ச்சி இருப்பதால், அதாவது குரு கிரகம் இடம் மாறுவதால், அய்யாவுக்கு எல்லாமே நல்லதுதான் நடக்கும்,'' என்றனர்.
உடனே கலைஞர் புன்முறுவல் பூத்தவாறே, ''குரு இடம் பெயர்ந்து இரண்டு நாள்களாகி விட்டது,'' என்றார்.
திகைத்துப்போன அர்ச்சகர்கள், ''இல்லை அய்யா... வரும் ஆறாம் தேதிதான் குரு இடம் மாறுகிறார்,'' என்றனர். மீண்டும் கலைஞர் ''இல்லை இல்லை... இரண்டாம் தேதியே குரு இடம் மாறிவிட்டார்,'' என்றார்.
அங்கே குழுமியிருந்த அமைச்சர் பெருமக்களும், உயர் அலுவலர்களும் கலைஞரின் நொடிப் பொழுதிலான நகைச்சுவைத் துணுக்கைக் கேட்டு, ரொம்பவே வாய்விட்டுச் சிரித்தனர்.
ஆலயம் உண்டு, ஆண்வர் உண்டு, அர்ச்சனை உண்டு எனக் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் அர்ச்சகர்களுக்கு ஆண்டு கொண்டிருக்கும் செம்மொழிச் செல்வரின் சொற்சிலம்பத்தை ரசிக்கத்தான் முடியுமா? தெம்புதான் உண்டா? இப்போதும் திகைத்து நின்ற அவர்களிடம், ''காடுவெட்டி குரு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தகவலைச் சொன்ன பிறகுதான் புரிந்த நிலையில் வெகுவாகச் சிரித்து, பல்லாண்டு, பல கோடி நூறாண்டு வாழ கலைஞரை வாழ்த்திவிட்டு விடைபெற்றுச் சென்றனர்.
* இது நாலாந்தர அரசு!
சட்டப்பேரவையில் ஒருமுறை எம்எல்ஏ டாக்டர் ஹண்டே திமுக அரசைப் பற்றி விமர்சிக்கும்போது, ''இது மூன்றாந்தர சர்க்கார்'' என்றார்.
அதைக்கேட்டதும் ஆளுங்கட்சியினர் கோபத்தில் கிளர்ந்து எழுந்தனர். அனைவரையும் கைமயமர்த்திய கலைஞர், ''டாக்டர் இந்த அரசை மூன்றாந்தர அரசு என்றார். திருத்திக் கொள்ள வேண்டும். இது நாலாந்தர அரசு. புரியவில்லையா டாக்டர் அவர்களே? பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்ற நான்கு வர்ணங்களில் நான்காவது வகைப்பட்ட சூத்திரர்களின் அரசு இது,'' எனத் தெரிவித்தேன்.
அப்போது சபையில் சிரிப்பொலியால் ஏற்பட்ட ஆரவாரம் அடங்க வெகுநேரமாயிற்று. இப்படி எதிராளியை நாவன்மையால் திணறடிக்கும் திறமை கலைஞருக்கே உரித்தானது.
* அயம் சாரி...!:
கோவை நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பிற்குப் பிறகு, தீவிரவாதிகள் என சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்ட சமயம்.
செய்தியாளர்களின் கூட்டத்தில் கலைஞர் கலந்து கொண்டபோது ஒருவர், ''சிறையில் உள்ள முஸ்லிம் தீவிரவாதிகள் சித்ரவதை செய்யப்படவில்லை எனக் கூறியிருந்தீர்கள். ஆனால், அல்&உம்மா இயக்கத்தைச் சேர்ந்த அன்சாரியோ, சித்ரவதை செய்யப்பட்டது உண்மைதான் எனச்சொல்லி இருக்கிறாரே'' எனக் கேள்வி எழுப்பினார்.
அதைக்கேட்ட கலைஞர், ''அப்படியா சொன்னார் அன்சாரி...? ஐ ஆம் சாரி!,'' என பதில் அளித்ததுதான் தாமதம், கூட்ட அறையெங்கும் ஆரவாரச் சத்தமும் சிரிப்பொலியும்தான்.
* தொடரும் நூல் உறவு:
கவிஞர் வைரமுத்து ஒருமுறை தன் பிறந்தநாளையொட்டி கலைஞரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுவதற்காகச் சென்றிருந்தார். உங்கள் நூல்களால்தான் நான் தமிழைக் கற்றேன் என்று கூறி மரியாதை நிமித்தமாக அவருக்கு பொன்னாடை போர்த்தினார். கலைஞரும் பதிலுக்கு வைரமுத்துவுக்கு பொன்னாடை போர்த்தினார்.
அப்போது வைரமுத்து போர்த்திய பொன்னாடையில் இருந்து பிரிந்த ஒரு நூல், கலைஞரின் சட்டைப் பொத்தான் ஒன்றில் சிக்கிக் கொண்டது. அப்போது கலைஞர்,
''பார்த்தீர்களா... உங்களுக்கும் எனக்கும் உள்ள 'நூல்' தொடர்பு அறுந்து போகவில்லை,'' என்றார். அந்தக் கணத்தில் வைரமுத்துவும் கொஞ்சம் அசந்துதான் போனார்.
* எல்லோருக்கும் அல்வா கொடுத்த வீரப்பன்:
கடந்த 2000ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், வீரப்பன் பிடியிலிருந்து ராஜ்குமாரை மீட்பது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டம். முதல்வர் கலைஞர், கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, இரண்டு மாநில உயர் அதிகாரிகளும் இருந்தனர்.
அரசுத் தூதராக வீரப்பனை பார்த்துவிட்டு வந்த அண்ணன் நக்கீரன் கோபால், ''அவன் சொன்ன விஷயங்களைப் பத்தி, அவங்ககிட்டே எடுத்துச் சொன்னேன். அந்த சமயத்திலே, வீரப்பன் திடீர் திடீரென கோரிக்கைகளை அதிகரிச்சுக்கிட்டே இருந்தான். அதைக்கேட்டு கூட்டமே இறுக்கமாக ஆயிடுச்சு.
தேனீர் நேரத்துலயும் அந்த இறுக்கம் தளரலே. கிருஷ்ணாவுக்கு தரப்பட்ட முந்திரி கேரட் அல்வா இருந்த தட்டைக் காண்பித்து கலைஞர், 'இது வீரப்பன் கொடுத்த ''அல்வா'' என்றதும், அங்கிருந்தவங்க எல்லோரும், கலகலவெனச் சிரித்தனர். வீரப்பன் விவகாரத்தில் இறுக்கமா இருந்த எல்லோரையும் சகஜ நிலைக்குக் கொண்டு வந்த கலைஞரின் நகைச்சுவை உணர்வை கிருஷ்ணாவால் உடனடியாக பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
அதே நேரத்தில், ''இதைச் சிரிப்புக்காகத்தான் சொன்னேன்'' என கிருஷ்ணாவிடம் சொல்லவும் கலைஞர் மறக்கல.
(அண்ணன் நக்கீரன் கோபால் அவர்கள் தெரிவித்த தகவல் இது).
எப்படிப்பட்ட இறுக்கமான சூழ்நிலையையும் தனது பேச்சுத்திறத்தால்... சுவையான, சமயோசிதமான நகைச்சுவைத் துணுக்குகளால் தளர்த்தி விடக்கூடிய வல்லமை, அரசியல் உலகில் கலைஞர் ஒருவரைத் தவிர வேறு எவருக்குமே கிடையாது.