2020 மற்றும் 21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும், தமிழக நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் மீதான உரையை தொடங்கி பல்வேறு திட்டங்கள் மற்றும் நிதி ஒதிக்கீடு விவரங்களை வாசித்து வருகிறார்.
இந்நிலையில் அமமுக துணை பொதுச்செயலாளரும், ஆர்.கே நகர் தொகுதி எம்எல்ஏவுமான டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
நடப்பு நிதியாண்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத இறக்கம் தமிழ்நாட்டின் நிதி சூழ்நிலையை சிக்கலான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது என நிதியமைச்சரான ஓபிஎஸ்சே நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார். மத்திய அரசோடு இணக்கமாக இருந்தால் நிதி கிடைக்கும் என அமைச்சர்கள் கூறிவந்த நிலையில், மத்திய நிதி பகிர்வில் 7500 கோடிக்கு மேல் வரவேண்டி இருக்கிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அறிக்கையை முழுமையாக படித்தோம் என்றால் அடுத்து தேர்தல் வரப்போகிறது என்ற பீதிக்காக உருவாக்கப்பட்ட அறிக்கையாக உள்ளது தெரியவருகிறது. ஒவ்வொரு தமிழ்நாட்டு குடிமகன் தலையிலும் 57 ஆயிரம் ரூபாய் கடனை சுமத்தியுள்ளனர். அமைச்சர்கள் எல்லாம் ஏன் அடிக்கடி டெல்லி செல்கிறார்கள் என்று தெரியவில்லை.
டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளார்கள். ஆனால் அதன் அடுத்தகட்ட வளர்ச்சி பணி குறித்த எந்த அறிவிப்பும் இல்லை எனக் கூறினார்.