திமுகவின் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை நிதிச் சுமையை காரணம் காட்டி தமிழக முதல்வர் கைவிடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழச்சி தங்கபாண்டியன், ''நிதிச்சுமை காரணமாக அந்தத் திட்டத்தை முற்றிலுமாக கைவிடுகிறோம் என தமிழக முதல்வர் சொல்லவில்லை. இப்போது இல்லை அடுத்தது அந்த திட்டத்தைக் கொண்டு வருகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் நினைத்துப் பாருங்கள் கலைஞருடைய பேனா எப்படிப்பட்ட பேனா. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்பது அவர் ஆட்சிக்கு வந்தவுடன் முதன்முதலில் போட்ட கையெழுத்து. அவர் பேனாவை தூக்கிய ஒவ்வொரு நிமிடங்களும் தமிழர்களின் தலைவிதி நிமிர்ந்து இருக்கிறது. அத்தனை கோடி கையெழுத்துக்களை போட்ட பேனாவை அவரது நினைவுச் சின்னமாக கொண்டு வருவது என்பது சாலப்பொருத்தம். எந்த காரணத்தை காட்டியும் தமிழக முதல்வர் எந்த திட்டத்தையும் கைவிடவில்லை. தற்சமயம் நிதி சூழல் இப்படி இருக்கிறது. கூடிய விரைவில் அதை அமல்படுத்தும் என்பது தான் அவருடைய எப்போதும் மக்கள் முன்பாக வைக்கின்ற ஒரு கருத்து'' என்றார்.