தமிழ்நாட்டில் கரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் உயர்ந்துவரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. அதில் முக்கியமாக வார இறுதி நாளும், விடுமுறை நாளுமான ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் முழு முடக்கம் அமலில் இருக்கும் நிலையில், முழுமுடக்க பணிகளை ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்பொழுது, ''நேற்றைவிட இன்று கூடுதலாக 2,000 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய முழு ஊரடங்கு நல்ல பலனைத் தரும். ஒமிக்ரான் அறிகுறி உள்ளவர்கள் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை. தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது'' என்றார்.
அப்பொழுது, 'தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுமா?' என கேட்கப்பட்டதற்கு பதிலளித்த அமைச்சர், ''நாளையோ அல்லது நாளை மறுநாளோ முதல்வர் தலைமையில் கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெறும். மருத்துவத்துறை வல்லுநர்களுடன் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. ஊரடங்கை பொதுமக்கள் மீது திணித்து அதன்மூலம் அவர்களுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தக்கூடாது என்பதில் முதல்வர் நூறு சதவிகிதம் உறுதியாக இருக்கிறார். ஆனால் அதேநேரத்தில் தொற்று பரவுவதை தடுக்கத்தான் இதுபோல் இரவு ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு போன்றவை அவசியப்படுகிறது. போதிய படுக்கைகள் இருப்பதால் மக்கள் கவலைகொள்ள வேண்டாம்'' என்றார்.