தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று தனது ட்விட்டர் பதிவில் ‘திமுகவின் ஃபைல்கள்’ எனக் குறிப்பிட்டு ‘ஏப்ரல் 14, 2023 - காலை 10:15’ எனக் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து அவர் பதிவிட்ட காணொளியில் திமுகவின் முக்கிய தலைவர்களின் படங்கள் இடம்பெற்றிருந்தன. இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை தனது ரஃபேல் வாட்ச் ரசீதை வெளியிட்டார். தொடர்ந்து திமுக அமைச்சர்கள் குறித்த வீடியோ ஒன்றை காட்சிப்படுத்தினார். அந்த வீடியோவில் திமுகவைச் சேர்ந்த முக்கியமானவர்களின் சொத்து மதிப்புகள் குறித்து காட்சிகள் இருந்தன.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் தம்பிதுரை இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில், ''அதிமுகவை எம்ஜிஆர் உருவாக்கியது குடும்ப அரசியல் கூடாது என்பதற்காக, ஊழல் இருக்கக் கூடாது என்பதற்காக. ஜெயலலிதாவும் அரசியல் வாரிசாக வந்தார்கள். குடும்ப அரசியலாக அவர் வரவில்லை. அதேபோல் எடப்பாடி பழனிசாமி சாதாரண விவசாய குடும்பத்திலிருந்து இந்த நாட்டினுடைய முதலமைச்சரானார். இது வாரிசு அரசியல் கிடையாது.
அதிமுக ஜனநாயக முறையில் செயல்படக்கூடிய ஒரு இயக்கம். ஊழலுக்கே பெயர் போனது தான் திமுக. ஸ்பெக்ட்ரம் ஊழலில் இருந்து சர்க்காரியா கமிஷன் முதல் விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்த கட்சி திமுக என்பது எல்லோருக்கும் தெரியும். நாட்டு மக்களுக்கு தெரியும். திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது சட்டமன்றத்தில் எவ்வாறு அராஜகமாக செயல்பட்டார்கள். அதேபோல் ஆட்சிக்கு வந்த பிறகும் அராஜக செயலில்தான் திமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஜனநாயகத்திற்கு எதிரான கட்சியாக, ஊழல் மிகுந்த கட்சியாக திமுகவை தமிழக மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள்'' என்றார்.