Skip to main content

எத்தகைய தியாகத்திற்கும் தமிழக அரசும், கட்சிகளும் தயாராக இருக்கவேண்டும்: ராமதாஸ்

Published on 02/03/2018 | Edited on 02/03/2018


 

​    ​cauvery

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக பிரதமரை சந்திப்பதற்கான நேரம் தீர்மானிக்கப்படவில்லை என்றால், பிரதமர் இல்லம்- அலுவலகம் முன் போராட்டம் நடத்த வேண்டும். இவ்விஷயத்தில் எத்தகைய தியாகத்திற்கும் தமிழக அரசும், கட்சிகளும் தயாராக இருக்கவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

உச்சநீதிமன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்துவதென அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுத்து இன்றுடன் 9 நாட்களாகி விட்டன. ஆனால், பிரதமரை சந்திப்பதில் எந்த முன்னேற்றமும் எட்டப்படாதது மிகவும் கவலையளிக்கிறது.
 

காவிரிப் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியதன் நோக்கமே, இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றுபட்டிருக்கிறது என்பதைக் காட்டுவதும், பிரதமரை அனைத்துக் கட்சிக் குழுவினர் விரைவாக சந்தித்து இயன்றவரை அதிக அழுத்தம் கொடுப்பதும் தான். இவற்றில் முதல் நோக்கம் நிறைவேற்றப்பட்டு விட்ட நிலையில், இரண்டாவது நோக்கத்தை நிறைவேற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்ட நிலையில் 23-ஆம் தேதியே பிரதமருடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு மற்றும் புதுவை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சூரத் வழியாக தில்லி திரும்பியதும் பிரதமரை தமிழக அனைத்துக் கட்சிக் குழுவினர் சந்தித்திருக்க வேண்டும். ஆனால், 9 நாட்களாகியும் இதுவரை சந்திப்புக்கு தேதி குறிக்கப்படாதது மர்மமாக உள்ளது.
 

தமிழகத்தைப் பொறுத்தவரை இன்றைய நிலையில் காவிரிப் பிரச்சினையைத் தவிர வேறு முக்கியப் பிரச்சினைகள் எதுவும் இல்லை. அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிந்த உடனேயே தில்லி தமிழ்நாடு இல்லத்தில் உள்ள உறைவிட ஆணையர் பிரதமர் அலுவலகத்தைத் தொடர்ந்து கொண்டு சந்திப்புக்கு  நேரம் கேட்டிருக்க வேண்டும். அது சாத்தியமாகாத நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்த போது அவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து அனைத்துக் கட்சிக் குழுவினருடனான சந்திப்புக்கான நேரத்தை உறுதி செய்திருக்க வேண்டும். அந்த வாய்ப்பையும் தவற விட்டிருந்தால் தமிழக அரசின் தலைமைச் செயலர், பொதுப்பணித்துறை செயலர் தலைமையில் குழுவை அனுப்பி பிரதமர் அலுவலகத்துடன் பேசி நேரத்தைத் தீர்மானித்திருக்க வேண்டும். ஆனால், இவற்றையெல்லாம் தமிழக ஆட்சியாளர்கள் செய்தார்களா? இல்லையா? என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.
 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களின்  சொந்தப் பிரச்சினைகளுக்காக பிரதமர் நரேந்திரமோடியை நினைத்த நேரத்தில் சந்தித்த நிகழ்வுகள் அடிக்கடி நடந்தன. பிரதமர் அலுவலகத்துடன் முதலமைச்சர் அவ்வளவு நெருக்கமாக இருக்கும் நிலையில், தமிழகத்தின் முக்கியப் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்கு மட்டும் பிரதமர் அலுவலகக் கதவுகள் திறக்க மறுப்பதன் காரணம் விளங்கவில்லை. இவ்விஷயத்தில் காத்திருந்து ஏமாந்து விடக்கூடாது.
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் மீண்டும் ஒருமுறை தமிழகத்திற்கு துரோகம் இழைக்கப்பட்டு விடுமோ? என்ற அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏனெனில், சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் மேலாண்மை வாரியத்தை விரைவாக அமைக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளிப்படையாக கோரிக்கை வைத்த போதிலும், அவருக்குப் பிறகு பேசிய பிரதமர் நரேந்திர மோடி எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. அவரைத் தொடர்ந்து தமிழகம் வந்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறி விட்டார். இத்தகைய சூழலில் காவிரி மேலாண்மை வாரியம் என்பது காணல் நீராகி விடுமோ? என்ற அச்சமும், ஐயமும்  உழவர்களிடம் ஏற்பட்டுள்ளது. அதை அகற்ற வேண்டியது தமிழக அரசின் கடமையும், பொறுப்புமாகும். 
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக உச்சநீதிமன்றம் அளித்த 6 வாரக் கெடுவில் இரண்டு வாரங்கள் நிறைவடைந்து விட்டன. மீதமுள்ள 4 வாரங்களில் அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட வேண்டும். ஆனால், பிரதமரை சந்திக்க இன்னும் நேரம் கிடைக்காத நிலையில், எப்போது பிரதமரை சந்தித்து, வலியுறுத்தி, எப்போது மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்பதை நினைத்தாலே வேதனை ஏற்படுகிறது. எனவே, பிரதமரை சந்திக்கும் நேரத்தை மத்திய, மாநில அரசுகள் உடனே தீர்மானிக்க வேண்டும்.
 

பிரதமரை சந்திப்பதற்கான நேரம் ஞாயிற்றுக்கிழமைக்குள் தீர்மானிக்கப்படவில்லை என்றால், வரும்  திங்கட்கிழமை முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுவினர் தில்லி சென்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பிரதமர் இல்லம்- அலுவலகம் முன் போராட்டம் நடத்த வேண்டும். இவ்விஷயத்தில் எத்தகைய தியாகத்திற்கும் தமிழக அரசும், கட்சிகளும் தயாராக இருக்கவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்