ஈரோடு மாவட்டம், திருவாச்சியில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான கரியமாணிக்கப் பெருமாள் கோவிலின் நிலத்தை விற்பதற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்துள்ள திருவாச்சியில், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமா 500 ஆண்டுகள் பழமையான கரியமாணிக்கப் பெருமாள் கோவிலின் 4.59 ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை விற்க, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை விதிகளை மீறி, பொதுநலன் என்ற பெயரில், இந்து சமய அறநிலையத்துறை 'வேலியே பயிரை மேய்வது' போல், கோவில் நிலம் விற்கப்படுவதாகக் கூறி, அதற்குத் தடை விதிக்கக் கோரி, திருச்சியைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், சம்மந்தப்பட்ட கோவிலின் அறங்காவலர் மட்டுமே, அக்கோவிலின் நிலத்தை விற்பது தொடர்பாக முடிவெடுக்க முடியும் என விதி உள்ள நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக அறங்காவலராக இல்லாதவர், அக்கோவில் நிலத்தை விற்பது தவறு. சந்தை மதிப்பில் 1.21 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை 12 லட்சம் ரூபாய்க்கு விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்.
நிலத்தை விற்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்துக்கு தடை விதிக்கவும், நிலத்தை விற்க அனுமதித்த அரசாணையை ரத்து செய்யக்கோரியும் தொடரப்பட்ட இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ண குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கருத்து கேட்புக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து, மனுவுக்குப் பதிலளிக்கும்படி, இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.