ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள வெள்ளாளபாளையம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இன்று ஈரோடு ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஒரே நேரத்தில் இவ்வளவு பேர் உள்ளே செல்ல அனுமதி இல்லை. முக்கியமானவர்கள் மட்டும் செல்லுங்கள் என்று கூறினர்.
இதனால் கிராம மக்களுக்கும் போலீசாருக்குமிடையே சிறிது நேரம் வாக்குவாதம் நடந்தது. இதையடுத்து அந்த கிராம மக்கள் திடீர் என ஆட்சியர் அலுவலகத்தினுள் நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறும்போது, "எங்கள் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள சுடுகாட்டை தான் நாங்கள் காலம் காலமாக பயன்படுத்தி வருகிறோம். சுடுகாடு 1.33 ஏக்கர் நிலம் உடையது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் அந்த சுடுகாட்டின் 75 சென்ட் அளவு நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டார்.
அந்த இடத்தில் அவர் விவசாயம் செய்து வருகிறார். இதுகுறித்து வருவாய்த் துறை அலுவலர்களுக்கு நாங்கள் புகார் செய்தோம். அதன்பேரில் அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்து நிலத்தை அளந்து சென்றனர். இந்த நிலையில் சென்ற மாதம் 30ஆம் தேதி எங்கள் கிராமத்தை சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டார். அவரை அடக்கம் செய்ய மயானத்திற்கு சென்று பார்த்தபோது அதே நபர் மயானத்தை மீண்டும் ஆக்கிரமித்து இருந்தார்.
இதைக் கண்டித்து நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். அடுத்த நாள் நம்பியூர் வருவாய் வட்டாட்சியர் நம்பியூர் இன்ஸ்பெக்டர் உட்பட அரசு அலுவலர்கள், ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பகுதியில் இருந்த கம்பி வேலியை அகற்றி இறந்த நபரை புதைக்க உதவி செய்தனர். இதற்கிடையே பதினாறாம் நாள் சடங்கு செய்வதற்காக நாங்கள் மயானத்தை சென்று பார்த்தபோது இறந்த நபர் புதைத்த இடத்தில் அந்த ஆக்கிரமிப்பாளர் ஜேசிபி எந்திரம் மூலம் குழிதோண்டி உடலை அப்புறப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தார்.
இதுகுறித்து நம்பியூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. எனவே நாங்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த மயானத்தை எங்களிடம் மீண்டும் திருப்பி கொடுக்க வேண்டும். மயானத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தொடர்ந்து மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.