ஊருக்குத்தான் உபதேசமா... சட்டத்திற்கு புறம்பாக யார் நடந்தாலும் குற்றம் தானே... அதிலும் உடன் பணிபுரியும் சக பெண் பணியாளர்களுக்கே தொல்லை கொடுத்தால்...? சஸ்பெண்ட் தான் என அறிவித்துவிட்டார் ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் ஐ.பி.எஸ் அவர்கள்.
கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் ஏட்டு சுப்பிரமணியம். ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேசனில் பணியாற்றி வருகிறார் சுமதி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சுமதி போலீஸ் மீது தீராத காதல் ஏட்டு சுப்பிரமணிக்கு. சுமதியிடம் தொலைபேசியில் "ஏய் நீ அழகாக இருக்கே... என் மனம் உன்னையே சுற்றி வருகிறது" என அவ்வப்போது காதல் கவிதை பேசி வந்துள்ளார். அதற்கு சுமதி ஒரு கட்டத்தில் ''எனக்கு உன்னை பிடிக்கவில்லை. இனிமேல் போன் பேசாதே'' என கடுமையாக கூறியிருக்கிறார்.
அப்போதும் விடாத ஏட்டு சுப்பிரமணி முகநூல் பக்கத்தில் சுமதியை வர்ணித்து பதிவுகள் தொடர்ந்து போட்டு வந்துள்ளார். சுமதி, ஏட்டு சுப்பிரமணியிடம் அடி பணியாமல், பாடம் கற்பிக்க முடிவு செய்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் போலீஸ் சுமதி, ஈரோடு எஸ்.பி. சக்திகணேசனிடம் ஆதாரத்துடன் புகார் மனு கொடுத்தார்.
இது சம்பந்தமாக துறை ரீதியாக விசாரணை நடத்த எஸ்.பி. சக்திகணேசன் ஈரோடு மகளிர் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமிக்கு உத்தரவிட்டார். அந்த விசாரணையில் ஏட்டு சுப்பிரமணி முகநூலில் அவதூறாக பெண் போலீஸ் சுமதி பற்றி பதிவிட்டது உண்மை என தெரிய வந்தது. மேலும் சுமதியும் ஏட்டு சுப்பிரமணியனும் ஈரோடு ஆயுதப்படையில் சில வருடங்களுக்கு முன்பு ஒன்றாக பணியாற்றி வந்துள்ளனர். அப்போதிருந்தே இவர்கள் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டிருந்தது.
இந்தநிலையில் பெண் போலீஸ் சுமதியை தன் இச்சைக்கு வீழ்த்த முடியாமல் தவறான வகையில் ஏட்டு சுப்பிரமணியன் தனது முகநூல் பக்கத்தில் அவதூறுகளை பரப்பி வந்ததும் தெரியவந்தது. இதை முழுமையாக விசாரித்து அறிக்கையாக எஸ்.பி.யிடம் பெண் இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்தார். இதன் பேரில் ஏட்டு சுப்பிரமணியத்தை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி.சக்திகணேசன் உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் ஏட்டு சுப்பிரமணியன் மீது முறையாக கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும் ஈரோடு டவுன் போலீசார்க்கு எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
பெண் போலீசை சீண்டிய ஆண் போலீசை காப்பாற்ற நினைக்காமல் பெண் போலீஸ் பக்கம் உள்ள நியாயத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுத்த எஸ்.பி. சக்தி கணேசனை மகளிர் போலீசார் பலரும் பாராட்டினார்கள்.