பண்டிகை, திருவிழா என்றால் அது எல்லோருக்கும் ஒரு வித மகிழ்ச்சியை கொடுக்கும் அப்படித்தான் வட இந்தியர்களுக்கு குதூகலத்தைக் கொடுப்பது ஹோலி பண்டிகை.
இந்தியா முழுவதும் இது உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் கரோனா வைரஸ் பீதியால் பெரும்பாலான மாநிலங்களில் ஹோலி பண்டிகை களையிழந்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் உள்ள வட இந்தியர்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் வட இந்தியர்கள் ஹோலியை உற்சாகமாக கொண்டாடினர்.
ஈரோடு இந்திரா நகர் ஜெயின் கோவில் பகுதி, காமராஜ் வீதி, பிருந்தா வீதி, வளையக்கார வீதி, விவிசி ஆர் நகர், கருங்கல் பாளையம், திருநகர் காலனி, கடைவீதி ஈஸ்வரன் கோவில் வீதி, என்.எம் எஸ் காம்பவுண்ட், கே. ஏ.எஸ். நகர் என நகரின் மையத்தில் பத்தாயிரம் வட இந்தியர்கள் உள்ளார்கள்.
இந்த இடங்களில் வசித்து வரும் அவர்கள் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என வயது பாகுபாடு இன்றி ஒருவர் மீது ஒருவர் வண்ண கலர் பொடிகளை தூவியும் உற்சாகமாகவும் ஹோலி பண்டிகையை கொண்டாடினார்கள். இளம் பெண்கள் இசைக்கேற்ப நடனங்கள் ஆடி ஈரோடு வீதிகளில் காண்போரை பரவசப்படுத்தினார்கள். மேலும் தங்கள் வீடுகளில் செய்த விதவிதமான இனிப்பு பலகாரங்களை மற்றவர்களுக்கு வழங்கி தங்கள் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி ஹோலிப் பண்டிகையை கொண்டாடினர்.