தமிழகத்தில் சென்னையைத் தவிர திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், மதுரை, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவரான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு இந்த வைரஸ் தொற்று நோய்ப் பரவலைத் தடுக்க என்ன வகையான நடவடிக்கை எடுத்தது என பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி வருகிறார். அதே சமயத்தில் தி.மு.க.வின் ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை நேரில் சந்தித்து 32 கேள்விகள் அடங்கிய மனுவைக் கொடுத்து, அதற்கான பதிலைக் கேளுங்கள் என அறிவித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்ட திமுக செயலாளர்கள், மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து 32 கேள்விகள் அடங்கிய மனுவைக் கொடுத்து வருகிறார்கள். நேற்று (08/07/2020) ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவம் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுத்தார். மேலும் திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் சு.முத்துச்சாமி மாவட்டச் ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுத்தார்.
மனு கொடுத்த தி.மு.க.வினரிடம் மாவட்ட ஆட்சியர், மூன்று நாட்களில் உங்களுக்கு பதில் கூறுவதாகத் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுத்து வருவது அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.