Skip to main content

"50 சதவீத குற்றச்செயல்கள் குறைந்துள்ளன" - போலீஸ் எஸ்.பி. பெருமிதம்

Published on 03/01/2023 | Edited on 03/01/2023

 

erode district case percentage decreased this year by erode sp

 

ஈரோடு மாவட்டத்தில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளதோடு, திருட்டு வழக்குகளில் திருடுபோன பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் அதிகளவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சசிமோகன் ஐ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் கூறும்போது, "ஈரோடு மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டைக் காட்டிலும் 2022 ஆம் ஆண்டில் மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் போலீசார் சிறப்பாகப் பணியாற்றி உள்ளனர். குறிப்பாக கொலை, கொள்ளை வழக்குகள் வெகுவாகக் குறையும் வகையில் வேலை செய்துள்ளனர். குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் காவல்நிலையங்களில் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரவுடிகள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

 

மாவட்டம் முழுவதும் கடந்த 2021 ஆம் ஆண்டு 40 கொலை வழக்குகள் பதிவான நிலையில் 2022 ஆம் ஆண்டில் 21 கொலை வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 50 சதவீதம் குறைவாகும். மாவட்ட காவல்துறையின் செயல்பாடானது முந்தைய ஆண்டை விட இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக உள்ளது. இந்த ஆண்டு பதிவான அனைத்து கொலை வழக்குகளும் 100 சதவீதம் கண்டுபிடிக்கப்பட்டு 38 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்ற வழக்குகளை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு 377 குற்ற வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 101 வாகனங்கள் மற்றும் 228 சவரன் நகைகள் உட்பட ரூபாய் இரண்டு கோடியே 24 லட்சத்து 87 ஆயிரம் மதிப்புள்ள களவு சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. அதாவது 76 சதவீதம் களவு சொத்துக்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளோம்.

 

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 5142 நபர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் லாட்டரி வழக்குகளில் 315 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிர கஞ்சா தடுப்பு நடவடிக்கையின் மூலம் 244 கஞ்சா வழக்குகள் பதியப்பட்டு 396 நபர்களை கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 23 லட்சத்து 93 ஆயிரம் மதிப்புள்ள 163 கிலோ கஞ்சா, 3008 போதை மாத்திரைகள் மற்றும் 196 போதை சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 79 கஞ்சா குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தீவிர கஞ்சா தடுப்பு நடவடிக்கையின் மூலம் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 53 சதவீதம் அதிகப்படியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்றதாக 419 வழக்குகள் பதியப்பட்டு 465 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 12107 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, 17 குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்