ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்குக் கண்டனம் தெரிவித்தும் இன்று (02.12.2020) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்தச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களைத் திரும்பப் பெற கோரியும், இந்தியாவின் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாகவும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில், இன்று நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்குக் கண்டனம் தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்குக் காரணமான அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டதை திரும்பப் பெற வேண்டும், விவசாய விளை பொருட்களை அரசு கொள்முதல் செய்வதை தவிர்க்கும் வேளாண் விளை பொருட்கள் வணிக ஊக்குவிப்புச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், ஒப்பந்த விவசாயம் மூலம் கார்ப்பரேட்டுக்கு விவசாயிகளை அடிமையாக்கும் வேளாண் ஒப்பந்தப் பாதுகாப்புச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி, மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், ஈரோடு, பவானி, சத்தியமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் போராட்டம் நடந்தது.