ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு தலையில் பிளாஸ்டிக் குடங்களுடன் பிரபாகர் என்பவர் தலைமையில் ஒரு சமூகத்தின் சங்க நிர்வாகிகள் திரண்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சிலர் மலம் கலந்ததை கண்டித்து இவ்வாறு வந்ததாக அவர்கள் கூறினார்கள். குடங்களின் மீது வேங்கைவயல் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் அம்பேத்கரின் படங்கள் ஒட்டப்பட்டு இருந்தன. குடத்தினுள் மஞ்சள் கலந்த நீர் வைக்கப்பட்டிருந்தது. இது வேங்கைவயல் சம்பவத்தை நினைவு கூறும் விதமாக இருந்தது. இதனால் போலீசார் தண்ணீரை கீழே கொட்டி விட்டு காலி குடங்களுடன் அவர்களை செல்ல அனுமதித்தனர்.
முன்னதாக போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வேங்கைவயல் சம்பவத்தில் குற்றம் இழைத்தவர்களை இதுவரை அரசு கைது செய்யவில்லை. எனவே, இதனைக் கண்டித்து இவ்வாறு தங்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததாகக் கூறினர். அங்கு வந்து இருந்தவர்கள் சார்பாக பிரபாகர் என்பவர் ஈரோடு கிழக்கு தேர்தல் அலுவலர் சிவகுமாரிடம் மனுத்தாக்கல் செய்தார். இச்சம்பவம் ஈரோடு மாநகராட்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.