ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டுச் சந்தை கூடும். மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து இங்கு விற்பனைக்காக கொண்டு வரும் மாடுகளை வாங்கிச் செல்வார்கள். ஒவ்வொரு வாரமும் ரூபாய் 5 கோடி முதல் 8 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும்.
தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை நடைபெறும் இடம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குள் இருப்பதால் அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணங்களை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இதன் காரணமாக மாட்டுச் சந்தைக்கு கடந்த வாரம் வெளிமாநில வியாபாரிகள் குறைந்த அளவே வந்திருந்தனர். ஒரு மாட்டு வியாபாரி வேறு மாநிலத்திலிருந்து வரும்போது குறைந்தது 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை கொண்டு வந்து பத்து முதல் இருபது மாடுகளை மொத்தமாக வாங்கிச் செல்வார்கள். தேர்தல் நடத்தை விதிமுறைகளால் கொண்டு செல்லும் பணத்தை பறக்கும் படையினர் பறித்து விடுவார்கள் என மாட்டு வியாபாரிகள் சந்தைக்கு வருவதை தவிர்த்தனர்.
இதனையடுத்து மாட்டுச் சந்தை நிர்வாகம் சார்பில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகளுக்கு தனியாக ரசீது கொடுக்கப்பட்டு வருகிறது. நேற்று கூடிய மாட்டுச் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வந்திருந்தனர். அவர்களுக்கு மாட்டுச் சந்தை சார்பில் ரசீது வழங்கப்பட்டது. அந்த ரசீதில் அவர்களது பெயர், முகவரி, ஆதார் கார்டு, கொண்டு செல்லும் தொகை, தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது. வியாபாரிகள் மாடுகளை வாங்கிக் கொண்டு திரும்பிச் செல்லும்போது தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தால் இந்த ரசீதை காண்பித்து செல்கின்றனர். தற்போது கூடிய மாட்டுச் சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள், எருமைகள், கன்றுகள் என விற்பனைக்கு வந்தவற்றை வியாபாரிகள் வாங்கிச் சென்றார்கள். இதைப்போல் வெளிமாநிலத்தில் இருந்து வரும் வியாபாரிகள் இங்கேயே பணம் எடுக்கும் வகையில் நடமாடும் ஏடிஎம் மையம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய கூட்டுறவு வங்கி சார்பிலும் தனியார் வங்கி சார்பிலும் நடமாடும் ஏடிஎம் வாகனங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.