ஈரோடு கிழக்கு தொகுதி தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. பொதுமக்கள் வாக்களிப்பதற்கு 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 713 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 16 ஆயிரத்து 140 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 23 பேரும், 22 ராணுவ வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 898 பேர் உள்ளனர். தேர்தல் அன்று 238 வாக்குச் சாவடிகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் வாக்குப்பதிவு அன்று பொதுமக்கள் சிரமம் இன்றி வாக்களிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக வாக்குச்சாவடி மையங்களில் மின்சார வசதி, குடிநீர் வசதி, மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் தனிப் பாதைகள் அமைப்பு போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் தேர்தல் அன்று மத்திய அரசு ஊழியர்கள் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளனர். தற்போது வரை பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் எனக் கண்டறியப்பட்ட 20 வாக்குச் சாவடிகளில் தேர்தல் அன்று மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தேர்தல் அன்று துணை ராணுவத்தினர் பாதுகாப்புக்கு வர உள்ளனர்.
வாக்குச்சாவடிகளில் நடைபெறும் நிகழ்வுகளை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகிறது. இந்த நிகழ்வுகளை மாவட்ட தேர்தல் அதிகாரி கண்காணிக்கும் வகையிலும், தமிழக தேர்தல் அதிகாரி கண்காணிக்கும் வகையிலும், இந்திய தலைமை தேர்தல் அதிகாரி கண்காணிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு, பணம் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் மூன்று நிலை கண்காணிப்பு குழுக்கள், மூன்று பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் மற்றும் 10,000 ரூபாய்க்கு மேல் பரிசுப் பொருட்கள் கொண்டு சென்றால் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தால் அவை பறிமுதல் செய்யப்படும்.
ரூ.10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் பறிமுதல் செய்ய நேர்ந்தால் நிலை கண்காணிப்பு குழுவினர் வழக்குப் பதியாமல் வருமானவரித் துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்து அவர்கள் மூலம் வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பவும், வங்கி இருப்புக்கான பணம் கொண்டு சென்றாலும் உரிய அனுமதி உடன் கொண்டு செல்ல வேண்டும். இதேபோல் வாக்காளர்களை கவரும் வகையில் சேலை, வேட்டி, டீசர்ட் போன்றவை கொண்டு சென்றாலும் பிரச்சார கூட்டத்தில் காகித தொப்பி, மாஸ்க், துண்டு, ஸ்டிக்கர், பேட்ஜ் போன்றவை வழங்கினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.